ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘பாரத் மார்ட் (bharat Mart)’ என்ற இந்திய தயாரிப்புகளுக்கான ஒரு பெரிய புதிய வர்த்தக மையமானது, 2026 ஆம் ஆண்டின் இறுதிக்குள் துபாயின் ஜெபல் அலி ஃப்ரீ சோனில் (JAFZA) திறக்கப்பட உள்ளதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் துபாய் 2026 ஆம் ஆண்டில் பாரத் மார்ட் என்ற ஒரு பெரிய புதிய வர்த்தக மையத்தைத் திறக்கப்படும் என்று GCC பிராந்தியத்திற்கான DP வேர்ல்டின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநரான அப்துல்லா பின் தமிதன் (Abdulla bin Damithan) அவர்களும் அறிவித்துள்ளார்.
இந்த மையம் தற்போதுள்ள சீன வர்த்தகர்களுக்கான யிவு சந்தை (Yiwu Market) மற்றும் துருக்கிய வர்த்தகர்களுக்காக விரைவில் வரவிருக்கும் துர்க் மார்ட்டுக்கு (Turk Mart) அடுத்ததாக அமைந்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, இவை அனைத்தும் எக்ஸ்போ சிட்டிக்கு அருகில் ஷேக் முகமது பின் சையத் சாலையில் அமைந்துள்ளன.
தலைமை நிர்வாக அதிகாரி வெளியிட்டுள்ள விபரங்களின் படி, முதல் கட்டம் 2026 ஆம் ஆண்டில் திறக்கப்படும் என்றும், மேலும் 2027 ஆம் ஆண்டில் முழு செயல்பாடுகளும் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் 2.7 மில்லியன் சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள பாரத் மார்ட் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களைக் காட்சிப்படுத்துவதில் கவனம் செலுத்தும் என்று கூறப்படுகின்றது.
இந்த முயற்சி உலகளாவிய வர்த்தகர்களை ஈர்ப்பதற்கும் பொருட்களை மறு ஏற்றுமதி செய்வதற்கான முக்கிய மையமாக தன்னை நிலைநிறுத்துவதற்கும் துபாயின் முயற்சியின் ஒரு பகுதியாகும். தற்போது 1,600 ஷோரூம்கள் மற்றும் 324 கிடங்குகளைக் கொண்ட யிவு சந்தையின் வெற்றியைத் தொடர்ந்து இந்த திட்டம் அமைந்துள்ளது.
இந்தியாவும் ஐக்கிய அரபு அமீரகமும் சமீபத்தில் தங்கள் இருதரப்பு வர்த்தகத்தில் 100 பில்லியன் டாலர் வருவாயை எட்டியுள்ளன, இது இலக்கை விட ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே, 2022 இல் கையெழுத்திடப்பட்ட விரிவான பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தத்தின் (CEPA) மூலம் சாத்தியமானது என்று வெளிநாட்டு வர்த்தகத்திற்கான இணையமைச்சர் டாக்டர் தானி அல் செயூடி கடந்த வாரம் கூறியிருந்தார்.
பாரத் மார்ட் தொடர்பான விபரங்கள்
- மொத்த பரப்பளவு: 2.7 மில்லியன் சதுர அடி
- முதல் கட்டம்: 1.3 மில்லியன் சதுர அடி
- ஷோரூம்கள்: 1,500
- சேமிப்பு கிடங்கு இடம்: 700,000+ சதுர அடி
- வசதிகள்: அலுவலக இடங்கள், சந்திப்பு அறைகள், இலகுரக தொழில்துறை அலகுகள்
- சிறப்பு பகுதி: பெண்கள் தலைமையிலான வணிகங்களுக்கான பிரத்யேக பகுதி
DP World இன் குழுமத் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான சுல்தான் அகமது பின் சுலாயம், இந்த திட்டத்திற்கான கட்டுமானப் பணிகள் ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வருவதாகவும், இந்த திட்டத்தை “உலகளாவிய நுகர்வோருக்கு இந்திய தயாரிப்புகளுக்கான காட்சிப்படுத்தல்” என்றும் “இது அரசாங்க ஒத்துழைப்பு நடவடிக்கைக்கு ஒரு எடுத்துக்காட்டு” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பாரத் மார்ட் ஆனது ஜெபல் அலி துறைமுகத்திலிருந்து 11 கி.மீ தொலைவிலும், அல் மக்தூம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து 15 கி.மீ தொலைவிலும் அமைந்திருக்கும். இது எதிஹாட் ரயில் சேவை நெட்வொர்க்குடன் இணைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, ஏற்றுமதியாளர்கள் 150 கடல்சார் இடங்களுடனும் மற்றும் விமானம் வழியாக உலகளவில் 300க்கும் மேற்பட்ட நகரங்களுடனும் இணைப்பு வசதியை பெற முடியும்.
இதன் மூலம் துபாயில் வர்த்தகம் செய்யும் இந்திய ஏற்றுமதியாளர்கள் குறிப்பாக MSMEகள் (மைக்ரோ, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள்) அமீரகம் மட்டுமல்லாமல் கண்டங்கள் முழுவதும் இந்திய தயாரிப்புகளை வேகமாகவும் திறமையாகவும் நகர்த்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel