அமீரகத்தில் எமிரேட்ஸ் வானியல் சங்கத்தின் கணிப்புகளின்படி, இஸ்லாமியர்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான ஈத் அல் அதா வருகின்ற ஜூன் 6, 2025 வெள்ளிக்கிழமை கொண்டாடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இஸ்லாமிய நாட்காட்டியில் இறுதி மாதமான துல் ஹஜ் மாத தொடக்கத்தைக் குறிக்கும் பிறை நிலவு மே 27 அன்று தெரியும், எனவே, மே 28 துல் ஹஜ் மாதத்தின் முதல் நாளாக இருக்கும் என்று கூறப்படுகின்றது.
இந்த முன்னறிவிப்பு துல்லியமாக இருந்தால், துல் ஹஜ் மாதம் 9 ஆம் தேதி அனுசரிக்கப்படும் அரஃபா தினம் ஜூன் 5 ஆம் தேதி வியாழக்கிழமையும், அதைத் தொடர்ந்து ஜூன் 6 ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஈத் அல் அதாவும் வரும் என்பது குறிப்பிடத்தக்கது. ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிகாரப்பூர்வ பொது விடுமுறை அட்டவணையில், அரஃபா தினம் மற்றும் ஈத் அல் அதாவிற்கான விடுமுறை துல் ஹஜ் 9 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை நீடிக்கும் என்றும், நான்கு நாள் விடுமுறை வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், ஈத் அல் அதா வெள்ளிக்கிழமை வந்தால், ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிப்பவர்கள் நீண்ட வார விடுமுறையை அனுபவிக்கலாம். அதாவது, வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை அதிகாரப்பூர்வ விடுமுறை நாட்களாகவும், அதைத் தொடர்ந்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கமான வார விடுமுறை நாட்களும் இருக்கும்.
இருப்பினும், ஈத் அல் அதாவின் சரியான தேதி பிறை பார்ப்பதைப் பொறுத்து மாறுபடும் என்பதால், அது ஒரு நாள் மாறக்கூடும். அதாவது மே 27 ஆம் தேதி பிறை நிலவு தெரியவில்லை என்றால், து்ல் ஹஜ் தொடக்கம் மே 29 ஆம் தேதிக்கு தாமதமாகும், அதாவது ஜூன் 7 ஆம் தேதி சனிக்கிழமை ஈத் அல் அதா அனுசரிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது
“தியாகத்தின் பண்டிகை” என்றும் அழைக்கப்படும் ஈத் அல் அதா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய பெருமக்களால் கொண்டாடப்படும் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாகும்.
அரஃபா தினம் எப்போது?
ஈத் அல் அதாவிற்கு சற்று முன்பு வரும் அரஃபாத் தினம், ஜூன் 5, 2025 வியாழக்கிழமை வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஈத் போலவே, பிறை பார்த்ததன் பிறகு சரியான தேதி இதற்கும் உறுதிப்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே தேதி நெருங்கும்போது அதிகாரப்பூர்வ புதுப்பிப்புகளுக்கு காத்திருக்குமாறு குடியிருப்பாளர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel