துபாயைத் தளமாகக் கொண்டு செயல்படும் எமிரேட்ஸ் விமான நிறுவனம், 2024-25 ஆம் ஆண்டு பேக்கேஜ்களை கையாளுவதில் மிகவும் பரபரப்பான ஆண்டாகக் குறிக்கப்பட்டுள்ளது. சமீபத்திய அறிக்கைகளின் படி, மாதத்திற்கு 2.8 மில்லியனுக்கும் அதிகமான பைகளை விமான நிறுவனம் நிர்வகித்துள்ளது, இது துபாய் சர்வதேச விமான நிலையத்தில் (DXB) ஒரு நாளைக்கு 100,000 பைகளுக்கு சமமாகும்.
இது மட்டுமல்லாமல் உலகின் மிகப்பெரிய சர்வதேச விமான நிறுவனமான எமிரேட்ஸ், கையாளப்பட்ட மொத்த பேக்கேஜ்களில் ஆண்டுக்கு ஆண்டு 3.7% அதிகரிப்பையும் பதிவு செய்துள்ளது, அதே நேரத்தில் 99.9% பேக்கேஜ்களை சரியான முறையில் கையாளும் வெற்றி விகிதத்தைப் பராமரித்து, உலகளவில் சிறப்பாகச் செயல்படும் விமான நிறுவனங்களில் ஒன்றாக இது இடம்பிடித்ததாகத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
பேக்கேஜ்களை கையாளுவதில் மிகப்பெரிய அளவு இருந்தபோதிலும், தாமதமான, தொலைந்து போன அல்லது தவறாகக் கையாளப்படும் பேக்கேஜ்கள் என வரையறுக்கப்படும் ‘baggage mishandling’ விகிதமானது 1,000 பைகளுக்கு 1.4 என குறைவாக இருப்பதாக எமிரேட்ஸ் தெரிவித்துள்ளது. இது வேறு சில நிறுவனங்களை விட கிட்டத்தட்ட 30 மடங்கு குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், தாமதமான பேக்கேஜ்களில் 91% பேக்கேஜ்கள் 72 மணி நேரத்திற்குள் அவற்றின் உரிமையாளர்களுடன் மீண்டும் இணைக்கப்படுகின்றன என்பதை எமிரேட்ஸ் தெரிவித்துள்ளது. உள்நாட்டு பயணத்தை விட அதிகளவு சர்வதேச பேக்கேஜ் மற்றும் டிரான்சிட் லக்கேஜ்களை நிர்வகிக்கும் எமிரேட்ஸ் நிறுவனம் இது நிறுவனத்தின் குறிப்பிடத்தக்க சாதனையாகும் என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.
இது தவிர, மதிப்புமிக்க பொருட்களுக்கான அதன் விரைவான மீட்பு முறையையும் விமான நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. அதாவது, 94% என்ற அளவில், விமானத்தில் அல்லது DXB இல் உள்ள டெர்மினல் 3 இல் விடப்பட்ட பொருட்கள் 60 நிமிடங்களுக்குள் பயணிகளுக்குத் திருப்பித் தரப்படுவதாகத் தெரிவித்துள்ளது, இது ஒரு முன்முயற்சியுடன் கூடிய கண்காணிப்பு மற்றும் மீட்டெடுப்பு செயல்முறைக்கு உதாரணமாகும்.
லக்கேஜ்களை கண்காணித்தல்
2024 ஆம் ஆண்டில், எமிரேட்ஸ் அதன் மொபைல் அப்ளிகேஷனில் ‘Emirates Bag Connect’ என்ற விருப்பத்தை அறிமுகப்படுத்தியது, இது பயணிகள் தங்கள் லக்கேஜ்களை நிகழ்நேரத்தில் கண்காணிக்க அனுமதிக்கிறது. தவறாக கையாளப்பட்ட லக்கேஜ்களுக்கான புதுப்பிப்புகளையும் இந்த சேவை உள்ளடக்கியது, மேலும் இந்த சேவை இப்போது விமான நிறுவனத்தின் நெட்வொர்க் முழுவதும் 80 நிலையங்களில் கிடைக்கிறது.
இது ஒருபுறமிருக்க துபாயில், மாதந்தோறும் கையாளப்படும் 2.8 மில்லியன் லக்கேஜ்களில், சராசரியாக 2,300 பைகள் பேக்கேஜ் டேக்குகள் இல்லாமல் காணப்படுவதாகவும், எமிரேட்ஸ் மற்றும் dnata குழுக்கள் இணைந்து உரிமையாளரை முன்கூட்டியே கண்காணித்து, இந்த லக்கேஜ்களில் சராசரியாக 80 சதவீதம் மீட்கப்பட்டு விமானம் புறப்படுவதற்கு முன்பு விமானத்தில் ஏற்றப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானப் பயணத் தேவை தொடர்ந்து வளர்ந்து வரும் போதிலும், எமிரேட்ஸின் வலுவான லக்கேஜ் கையாளும் செயல்திறனானது வாடிக்கையாளர் திருப்திக்கான அதன் உறுதிப்பாட்டை பிரதிபலித்து வருகின்றது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel