ADVERTISEMENT

துபாயில் பணமோசடி வழக்கில் சிக்கிய பிரபல இந்திய தொழிலதிபர்..!! 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையுடன் நாடு கடத்த உத்தரவு..!!

Published: 5 May 2025, 8:41 AM |
Updated: 5 May 2025, 8:41 AM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தில் பெரிய அளவிலான பணமோசடி நடவடிக்கையில் ஈடுபட்டதற்காக, துபாயில் வசிக்கும் “அபு சபா” என்று அழைக்கப்படும் இந்திய தொழிலதிபரான பல்விந்தர் சிங் சாஹ்னிக்கு, ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்ததுடன், அவரை நாடு கடத்தவும் ஐக்கிய அரபு அமீரக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது. அமீரகத்தின் அரபு நாளிதழான எமரத் அல் யூம் வெளியிட்ட செய்தி அறிக்கையின்படி, பல்விந்தர் சிங் சாஹ்னியுடன் மேலும் பலர் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

ADVERTISEMENT

துபாயில் அடுக்குமாடி கட்டிடங்கள், பல கோடி மதிப்பிலான கார்கள், சொகுசு பங்களா என பல சொத்துகளுக்கு அதிபரான இவர், சோஷியல் மீடியாவிலும் மிகவும் பிரபலமானவராவார். மேலும், சில ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக வாங்கப்பட்ட தனது ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு 5 எண் கொண்ட நம்பர் பிளேட்டை 35 மில்லியன் திர்ஹம்ஸிற்கு வாங்கி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியிருந்தார்.

குற்றச் செயல்களில் இருந்து பெறப்பட்ட பணத்தின் மூலத்தை மறைக்க இந்தக் குழு போலி நிறுவனங்கள் மற்றும் சந்தேகத்திற்கிடமான வங்கி பரிவர்த்தனைகளைப் பயன்படுத்தியதாக நீதிமன்றம் கண்டறிந்ததைத் தொடர்ந்து, ஒவ்வொரு பிரதிவாதிக்கும் 500,000 திர்ஹம் அபராதம் விதிக்கப்பட்டதுடன், மேலும் தண்டனை அனுபவித்த பிறகு அவர்களை நாடு கடத்த உத்தரவிடப்பட்டதாக இது குறித்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும், பல்விந்தர் சிங் சாஹ்னி மற்றும் குற்றம் சுமத்தப்பட்டவர்களின் 150 மில்லியன் திர்ஹம் சட்டவிரோத சொத்துக்களையும், இந்தத் திட்டத்தில் பயன்படுத்தப்பட்ட கணினிகள், மொபைல் போன்கள் போன்ற எலெக்ட்ரானிக் சாதனங்கள் மற்றும் நிதிப் பதிவுகள் என அனைத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தாகவும் கூறப்படுகின்றது.

ADVERTISEMENT

இந்த பண மோசடி வழக்கில் உள்நாட்டு மற்றும் சர்வதேச கூட்டாளிகளின் தொடர்புடைய நிதி நடவடிக்கைகளின் பரந்த வலையமைப்பை அதிகாரிகள் கண்டுபிடித்ததை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் சட்டவிரோத நிதிகளின் தோற்றத்தை மறைக்க கற்பனையான கூட்டாண்மைகள் மற்றும் முன்னணி நிறுவனங்களைப் பயன்படுத்தியதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

துபாய் காவல்துறை கடந்த ஆண்டு டிசம்பரில் இந்த வழக்கை வழக்குரைஞர்களிடம் பரிந்துரைத்த நிலையில், நீதிமன்ற விசாரணைகள் நடப்பு ஆண்டின் ஜனவரியில் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் இந்த வழக்கானது இப்போது மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

இறுதி கட்ட விசாரணையில் மூன்று நிறுவனங்களும் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டு, ஒவ்வொரு நிறுவனத்திற்கும் தலா 50 மில்லியன் திர்ஹம் அபராதம் விதிக்கப்பட்டது. இதில் சில பிரதிவாதிகள் ஆஜராகாமலேயே விசாரிக்கப்பட்டதாகவும், மற்றவர்கள் நீதிமன்றத்தில் ஆஜரானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதிக் குற்றங்கள் குறித்த ஐக்கிய அரபு அமீரகத்தின் கடுமையான நிலைப்பாட்டையும், போலி வணிகங்கள் மற்றும் சர்வதேச உறவுகளை உள்ளடக்கிய அதிநவீன பணமோசடி வலையமைப்புகளை ஒடுக்குவதற்கான அமீரகத்தின் முயற்சிகளையும் இந்த வழக்கு எடுத்துக்காட்டுவதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel