தமிழகத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற பொறியாளர் ஒருவர் எமிரேட்ஸ் டிராவின் வரலாற்றில் மிகப்பெரிய தனிநபர் பரிசை வென்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார். சென்னையில் வசிக்கும் ஸ்ரீராம் ராஜகோபாலன் என்பவர், கடந்த மார்ச் 16 அன்று நடந்த MEGA7 கேமில் ஏழு எண்களையும் பொருத்தி 100 மில்லியன் திர்ஹம்ஸ் ($27 மில்லியன்) கிராண்ட் பரிசை வென்றதாக எமிரேட்ஸ் டிரா வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அதிர்ஷ்டசாலி வெற்றியாளர், வெற்றி பெற்றது குறித்து கூறுகையில் தனது மொபைலில் தோராயமாக எண்களைத் தட்டியதாக எமிரேட்ஸ் டிரா ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. இது குறித்து ஓய்வுபெற்ற பொறியாளர் கூறுகையில், “என்னால் நம்ப முடியவில்லை. நான் மீண்டும் வீடியோவைப் பார்த்து உறுதிப்படுத்த ஒரு ஸ்கிரீன்ஷாட்டை எடுத்தேன்” என்று உற்சாகத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
ஒரு சாதாரண குடும்பப் பின்னணியைச் சேர்ந்த ஸ்ரீராம் முதலில் 1998 இல் சவுதி அரேபியாவுக்கு குடிபெயர்ந்ததாகவும், அங்கு அவர் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக வேலை செய்து மனைவி மற்றும் மகன்களுடன் வசித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. அதையடுத்து, கடந்த ஆண்டு இந்தியா திரும்பிய அவர், தனது அதிர்ஷ்டத்தை முயற்சிக்க முடிவு செய்து பெரிய வெற்றியைப் பெற்றிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், வெற்றி பெற்ற தருணத்தை விவரித்த அவர், இந்த வெற்றியால் கிடைத்த வாழ்க்கையை மாற்றும் மிகப்பெரிய தொகை 70% மகிழ்ச்சியையும் 30% பயத்தையும் கொண்டு வந்தது என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய ஸ்ரீராம், “இது எனது வெற்றி மட்டுமல்ல; இது எனது குடும்பம், எனது குழந்தைகள் மற்றும் பிறருக்கு நம்பிக்கை. ஒவ்வொரு தந்தையும் தனது குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாக்க விரும்புகிறார், இப்போது என்னால் முடியும்” என்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
பரிசுத் தொகையை எப்படி பயன்படுத்தப்போகிறார் என்ற எதிர்காலத் திட்டங்களை அவர் விவரிக்கவில்லை என்றாலும், வெற்றிகளின் ஒரு பகுதியை தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடையாக வழங்குவதாகவும், புதிதாகக் கிடைத்த செல்வம் இருந்தபோதிலும் நிலையாக இருக்க உறுதிபூண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டைச்செரோஸால் (Tycheros) இயக்கப்படும் எமிரேட்ஸ் டிரா, ஐக்கிய அரபு அமீரகத்தின் வணிக விளையாட்டு ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒழுங்குமுறை மாற்றங்கள் காரணமாக 2023 ஆம் ஆண்டின் இறுதியில் அதன் UAE செயல்பாடுகளை நிறுத்தியது. இது எமிரேட்ஸ் டிராவை சர்வதேச சந்தைகளுக்கு கவனம் செலுத்தத் தூண்டியது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel