துபாய், மதுரை இடையே நேரடி விமான சேவை பல ஆண்டுகளாக இயக்கப்பட்டு வந்த போதிலும் அபுதாபியில் இருந்து மதுரைக்கு நேரடி விமான சேவை இருந்தது கிடையாது. எனவே மதுரையை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்தவர்கள் அபுதாபியில் இருந்து பயணம் மேற்கொள்ளவிருந்தாலோ அல்லது அபுதாபிக்கு பயணிக்கவிருந்தாலோ திருச்சி அல்லது கனெக்டிங் பிளைட் மூலம் மதுரை பயணிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
இருப்பினும் இது போன்ற விமான சேவைகளுக்கு பயண நேரம் அதிகம் எடுக்கும் என்பதால் மதுரை மற்றும் அபுதாபி இடையே நேரடி விமான சேவை இயக்கப்பட வேண்டும் என்பது பலரின் கோரிக்கையாக இருந்தது. இந்நிலையில் இந்தியாவின் பட்ஜெட் விமான நிறுவனங்களில் ஒன்றான இண்டிகோ, அடுத்த மாதம் முதல் அபுதாபிக்கும் மதுரைக்கும் இடையே நேரடி விமானங்களை இயக்கவிருப்பதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இது ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் தென்னிந்தியா இடையேயான இணைப்பை மேம்படுத்தும் என கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, புதிய சேவை ஜூன் 13, 2025 அன்று தொடங்க உள்ளது, இது வாரத்திற்கு மூன்று முறை அதாவது திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இயக்கப்படும் என்பது தெரிய வந்துள்ளது.
நேர அட்டவணை
இந்திய நேரப்படி, மதுரையிலிருந்து பிற்பகல் 2.35 மணிக்கு புறப்பட்டு, அபுதாபி நேரப்படி மாலை 5.20 மணிக்கு அங்கு சென்றடையும். மறுவழியில், அபுதாபி நேரப்படி, காலை 7.20 மணிக்கு புறப்பட்டு, இந்திய நேரப்படி பிற்பகல் 1.50 மணிக்கு மதுரையில் தரையிறங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் இண்டிகோவின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் அல்லது மொபைல் செயலி மூலம் அபுதாபி-மதுரை வழித்தடத்திற்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.
பயண அனுபவத்தை மேம்படுத்த, முன்பதிவு செய்யப்பட்ட உணவு மற்றும் இருக்கை தேர்வுகள் உட்பட பல்வேறு சேவைகளை விமான நிறுவனம் வழங்குகிறது. மேலும் விமானங்கள் ஏர்பஸ் A320neo விமானத்தைப் பயன்படுத்தி இயக்கப்படும். இந்த கூடுதல் சேவை இண்டிகோவின் பரந்த விரிவாக்க உத்தியின் ஒரு பகுதியாகும்.
அத்துடன் இந்த புதிய நேரடி விமானச் சேவை, அமீரகம் மற்றும் தமிழ்நாட்டிற்கு இடையே நேரடி விமானங்களுக்கான வளர்ந்து வரும் தேவையைப் பூர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது, மேலும் அடிக்கடி பயணிக்கும் பயணிகளுக்கு நிவாரணமளிக்கும் வகையில் வந்துள்ளது. எனவே, பயணிகளின் ஆதரவை பொறுத்து, கூடுதல் நாட்கள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மட்டுமின்றி, ஜூன் 2025 இல் அபுதாபியிலிருந்து புவனேஸ்வர் மற்றும் விசாகப்பட்டினம் போன்ற பிற இந்திய நகரங்களுக்கும் புதிய வழித்தடங்களில் சேவை இயக்கப்படும் என்றும் இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel