ஐக்கிய அரபு அமீரகத்தில் அதிகாரப்பூர்வ கோடைக்காலம் வருகின்ற ஜூன் முதல் தொடங்கவுள்ள நிலையில், இப்போதே நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெப்பம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இத்தகைய வெப்பமான காலகட்டத்தில் ஏராளமான அமீரகக் குடியிருப்பாளர்கள் கோடை வெப்பத்திலிருந்து தப்பிக்க குளிர்ந்த, பசுமையான சுற்றுலாத் தலங்களைத் தேடுவார்கள்.
அவ்வாறு குளிர்ச்சியான இடங்களைத் தேடுபவர்களுக்கு, ஓமானின் தோஃபர் பகுதி சரியான இடமாகும், குறிப்பாக கரீஃப் பருவம் (Khareef season) முழு வீச்சில் இருக்கும் ஜூலை மாதத்தில் அங்கு செல்வது சிறந்த அனுபவத்தைக் கொடுக்கும். இந்த தனித்துவமான பருவமழை காலம் இப்பகுதியை பசுமையான சொர்க்கமாக மாற்றுகிறது, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் அதற்கு அப்பால் இருந்து ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை ஈர்க்கிறது.
கரீஃப் பருவம் என்றால் என்ன?
அரபு மொழியில் “இலையுதிர் காலம்” என்று பொருள்படும் கரீஃப், அதிகாரப்பூர்வமாக ஜூன் 21 முதல் செப்டம்பர் 20 வரை நீடிக்கும். இந்த பருவத்தில் தோஃபருக்கு, குறிப்பாக சலாலாவை சுற்றி நிலையான பருவமழையைக் கொண்டுவருகிறது. தோஃபரின் மேயர் டாக்டர் அகமது அல் கசானியின் கூற்றுப்படி, பசுமை பொதுவாக ஜூன் மாத இறுதியில் தோன்றும், மேலும் தற்பொழுது மழை வழக்கத்தை விட சற்று தாமதமாக வந்தாலும், இரண்டு முதல் மூன்று வாரங்கள் நீடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
அமீரக குடியிருப்பாளர்களுக்கு ஒரு பிரபலமான சுற்றுலா
ஒவ்வொரு கோடையிலும், ஆயிரக்கணக்கான அமீரக குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் குளிர்ந்த வெப்பநிலை, மூடுபனி மலைகள் மற்றும் பிரம்மிக்க வைக்கும் நிலப்பரப்புகளை அனுபவிக்க சலாலாவிற்கு வருகிறார்கள். இந்த பார்வையாளர்கள் ஹத்தா மற்றும் அல் அய்ன் போன்ற நுழைவுப் புள்ளிகள் வழியாகவோ, சாலை வழியாகவோ அல்லது விமானம் வழியாகவோ பயணிக்கலாம்.
விசா தேவைகள் மற்றும் நுழைவு
UAE நாட்டினர் ஓமானுக்குள் நுழைய விசா தேவையில்லை. அமீரகத்தில் வசிக்கும் வெளிநாட்டு குடியிருப்பாளர்கள் சுற்றுலா விசாவிற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம், இதன் விலை 5 ஓமானி ரியால் (சுமார் 48 திர்ஹம்ஸ்) ஆகும். ராயல் ஓமன் காவல்துறை அதன் eVisa போர்டல் மூலம் விரைவான, மென்மையான நுழைவு செயல்முறைக்காக ஆன்லைன் விண்ணப்பங்களை ஊக்குவிக்கிறது.
அதிகரிக்கும் பார்வையாளர் எண்ணிக்கை
2023 ஆம் ஆண்டில், கரீஃப் காலத்தில் சுமார் ஒரு மில்லியன் சுற்றுலாப் பயணிகள் ஓமானுக்கு வருகை தந்ததாகப் புள்ளிவிபரங்கள் கூறுகின்றன, அவற்றில் 70% உள்ளூர்வாசிகள் மற்றும் 30% சர்வதேச பார்வையாளர்கள் ஆவர். அதே நேரத்தில் GCC -யில் இருந்து வருகை தரும் சுற்றுலாப் பயணிகளில் UAE அதிக எண்ணிக்கையைக் கொண்டிருந்தது என்றும், அதைத் தொடர்ந்து சவுதி அரேபியா இரண்டாவது இடத்தில் இருந்ததாகவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில் உள்கட்டமைப்பு முதலீடுகள் மற்றும் புதிய ஹோட்டல் திட்டங்கள் மூலம் அடுத்த மூன்று ஆண்டுகளில் தோஃபர் ஆண்டுதோறும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை 10% அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக டாக்டர் அகமது குறிப்பிட்டுள்ளார்.
தங்குமிடம் மற்றும் விரிவாக்கத் திட்டங்கள்
பார்வையாளர்களிடையே வளர்ந்து வரும் தேவையை பூர்த்தி செய்ய, தோஃபர் நகராட்சி மற்றும் பாரம்பரியம் மற்றும் சுற்றுலா அமைச்சகம் ஹோட்டல் மற்றும் ரிசார்ட் திறனை அதிகரித்து வருகின்றன. சமீபத்திய செய்திகளின் படி, இந்த ஆண்டு கரீஃப் காலத்தில் சில புதிய ஹோட்டல்கள் திறக்கப்படும், மேலும் சில குளிர்காலத்தில் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சலாலாவில் என்ன சிறப்பு?
கரீஃப் பருவத்தின் போது பார்வையாளர்கள் பல்வேறு வகையான ஈர்ப்புகள் மற்றும் செயல்பாடுகளை அனுபவிக்கலாம், அவற்றுள்:
- ட்ரோன் நிகழ்ச்சிகள், ஒளி காட்சிகள், வாட்டர் ஃபவுண்டைன், மற்றும் நாடக நிகழ்ச்சிகள்
- உலகின் மிகப்பெரிய மணல் திட்டான ரம்லத் ஜதிலா
- அழகான நீர்வீழ்ச்சிகள், வரலாற்று கோட்டைகள், மற்றும் வெள்ளை மணல் கடற்கரைகள்
- சீன நினைவுச்சின்னம் – சீனாவிற்கு வெளியே உள்ள ஒரே நினைவுச்சின்னம்
நீங்கள் அழகிய நிலப்பரப்புகள், கலாச்சார அனுபவங்கள் அல்லது கோடை வெப்பத்திலிருந்து புத்துணர்ச்சியூட்டும் ஓய்வு இடத்தை தேடுகிறீர்களானால், நிச்சயம் சலாலா சிறந்த இடமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel