ADVERTISEMENT

UAE: மெதுவாக வாகனம் ஓட்டியதற்காக 4 லட்சத்துக்கும் மேற்பட்ட ஓட்டுநர்களுக்கு அபராதம் விதிப்பு…

Published: 3 May 2025, 1:32 PM |
Updated: 3 May 2025, 1:34 PM |
Posted By: Menaka

கடந்த ஆண்டான 2024இல், ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் சுமார் 409,000 க்கும் மேற்பட்ட ஓட்டுநர்களுக்கு மிக மெதுவான வேகத்தில் வாகனம் ஓட்டியதற்காக அபராதம் விதிக்கப்பட்டதாக உள்துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட சமீபத்திய புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. குறிப்பாக வேகமான நெடுஞ்சாலைகளில் குறைந்த வேகத்தில் சென்றதால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த அபராதங்களில் பெரும்பாலானவை அபுதாபியில் வழங்கப்பட்டவை, இதில் 409,059 மீறல்கள் பதிவாகியுள்ளன. இதனுடன் ஒப்பிடுகையில், துபாயில் 192 அபராதங்கள் மட்டுமே வழங்கப்பட்டன, மற்ற எமிரேட்களில் இதனை விட மிகக் குறைவு ஆகும். அதிலும் ஃபுஜைராவில் எந்த அபராதமும் பதிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அபராதங்கள் முக்கியமாக, குறைந்தபட்ச வேக வரம்பிற்கு கீழே வாகனம் ஓட்டுதல், பின்னால் இருந்து வரும் வேகமான கார்களுக்கு ஒதுங்கி வழிவிடாமல் இருப்பது, குறிப்பாக முந்திச் செல்லும் (இடது) பாதையில் வழிவிடாதது போன்ற நடத்தைகளுக்கு விதிக்கப்பட்டவை என்றும், இத்தகைய நடத்தை போக்குவரத்தை சீர்குலைப்பது மட்டுமல்லாமல் விபத்து அபாயத்தையும் அதிகரிக்கிறது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

அமீரக போக்குவரத்து சட்டத்தின் கீழ், குறைந்தபட்ச வேக வரம்பிற்கு கீழே வாகனம் ஓட்டுவது 400 திர்ஹம் அபராதத்திற்கு வழிவகுக்கும். அதே போல் சாலைகளில் மெதுவாக வாகனம் ஓட்டுபவர்கள் வலது பாதையிலேயே இருக்க வேண்டும், முந்திச் செல்வதற்கு இடது பாதையை விட்டு வெளியேற வேண்டும் என்று சட்டம் கூறுகிறது.

அமீரக அரசாங்கம் கடந்த மார்ச் 29ஆம் தேதி முதல், புதிய போக்குவரத்து சட்ட புதுப்பிப்புகள் செயல்படுத்தத் தொடங்கிய நிலையில், அடுத்த ஆறு மாதங்களில் பாதை வேகம் மற்றும் அமலாக்கம் குறித்த விரிவான விதிகள் எதிர்பார்க்கப்படுகின்றன. இது ஒருபுறமிருக்க அனைத்து பாதைகளிலும் குறைந்தபட்ச வேகம் குறித்து தெளிவான விதிகள் வேண்டும் என்றும், மெதுவாக வாகனம் ஓட்டுபவர்கள் விபத்துகளை ஏற்படுத்தும்போது பொறுப்பேற்க வேண்டும் என்றும் பல ஓட்டுநர்கள் கோருவதாகக் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

இதற்கிடையில், அபுதாபி காவல்துறை மெதுவாக வாகனம் ஓட்டுவது குறித்த ஆன்லைன் விழிப்புணர்வு பிரச்சாரங்களையும் தொடங்கியுள்ளது. அதில் பின்வரும் விதிமுறைகள் குறித்த நினைவூட்டல்களை ஓட்டுநர்களுக்கு வழங்கியுள்ளது:

  • மெதுவாக வாகனம் ஓட்டினால் வலது பாதையில் செல்லுங்கள்
  • எப்போதும் வேகமாக செல்லும் கார்களை ஓவர்டேக் செய்ய விடுங்கள்
  • இடதுபுற (முந்திச் செல்லும்) பாதையில் மெதுவாக வாகனம் ஓட்டுவதைத் தவிர்க்கவும்
  • வாகனங்களுக்கு இடையில் பாதுகாப்பான தூரத்தை வைத்திருங்கள் மற்றும் தாறுமாறாக  வாகனம் ஓட்டுவதைத் தவிர்க்கவும்

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel