ஷார்ஜா எமிரேட்டின் அல் கஜாமியா பகுதியில் உள்ள குப்பைத் தொட்டியின் அருகே ஒரு ஸ்ட்ரோலரில் (stroller) சுமார் எட்டு மாத வயதுடைய ஆண் குழந்தை கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, ஷார்ஜா காவல்துறை விசாரணையைத் தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த மே 6 ஆம் தேதி இரவு சுமார் 10 மணியளவில், அருகிலுள்ள குப்பைத் தொட்டியை சுத்தம் செய்து கொண்டிருந்த நகராட்சி ஊழியர் ஒருவரால் குழந்தை கண்டுபிடிக்கப்பட்டதாகவும், தொழிலாளி உடனடியாக அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு தகவலைத் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
அதையடுத்து, சம்பவ இடத்திற்கு ஒரு போலீஸ் ரோந்து மற்றும் ஆம்புலன்ஸ் அனுப்பப்பட்டதாகவும், பின்னர் குழந்தை மருத்துவ பராமரிப்புக்காக அல் காசிமி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒரு போலீஸ் அதிகாரியின் கூற்றுப்படி, குழந்தையின் உடல்நிலை சீராக உள்ளது மற்றும் முழு மருத்துவ கவனிப்பைப் பெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. அத்துடன் “குழந்தையை குழந்தைகள் பாதுகாப்புக் குழுவிடம் ஒப்படைக்கப்படுவதற்கு முன்பு மருத்துவமனை முழுமையான மருத்துவ பரிசோதனையை மேற்கொண்டு தேவையான சிகிச்சையை வழங்கும்” என்று அந்த அதிகாரி மேலும் கூறியுள்ளார்.
இதற்கிடையில், குழந்தையின் பெற்றோரைக் கண்டுபிடித்து, கைவிடப்பட்டதற்கான சூழ்நிலைகளைக் கண்டறிய ஷார்ஜா காவல்துறை தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, விசாரணைக்கு உதவக்கூடிய எந்தவொரு தகவலையும் தெரிவிக்குமாறு அதிகாரிகள் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel