ADVERTISEMENT

துபாயில் ஏற்பட்ட தீ விபத்தால் கரும்புகையாக காட்சியளித்த அல் கூஸ்.!!

Published: 1 May 2025, 5:16 PM |
Updated: 1 May 2025, 5:29 PM |
Posted By: Menaka

துபாய் குடியிருப்பாளர்கள் பலர் இன்று (வியாழக்கிழமை) அல் கூஸ் தொழில்துறை பகுதியில் இருந்து அதிகளவில் கரும்புகை வெளியேறுதைக் கவனித்ததாகத் தெரிவித்துள்ளனர். டவுன்டவுன் துபாய் மற்றும் துபாய் மெரினா உட்பட நகரத்தின் பல பகுதிகளில் புகை மூட்டமாகக் காணப்பட்டதாக பெரும்பாலான குடியிருப்பாளர்கள் புகாரளித்துள்ளனர்.

ADVERTISEMENT

இது தொடர்பாக துபாய் சிவில் பாதுகாப்பு ஊடகங்களுக்கு அளித்த அறிக்கையின் படி, இந்த கரும்புகையானது தீவிபத்தால் ஏற்பட்டதால தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீ விபத்து குறித்து காலை 8:24 மணிக்கு அவர்களுக்கு தகவல் கிடைத்தது என கூறப்பட்டுள்ளது. பொருட்களை சேமித்து வைத்திருந்த இரண்டு கிடங்குகளில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், தீவிரத்தன்மையில் இது மிதமான தீவிபத்து என வகைப்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதையடுத்து, அல் கூஸ் தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் 6 நிமிடங்களுக்குள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும், பற்றி எரிந்து கொண்டிருந்த தீ காலை 9:40 மணிக்கு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த தீ விபத்தால் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என்பதையம் அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். சிறிது நேரத்திலேயே, காலை 9:51 மணிக்கு குளிரூட்டும் நடவடிக்கைகள்  தொடங்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

இதற்கிடையில், ஆன்லைனில் பகிரப்பட்ட புகைப்படங்கள், அல் கூஸில் உள்ள ஈக்விட்டி மெட்ரோ நிலையம் அருகே அடர்த்தியான புகை மூட்டம் எழுவதைக் காட்டுகின்றன. மேலும், உயரமான கட்டிடங்களில் வசிப்பவர்கள், குறிப்பாக துபாய் மெரினாவில் வசிப்பவர்கள், புகையின் தெளிவான காட்சிகளைப் பெற்றதாகத் தெரிவித்துள்ளனர் .

துபாய் மெரினாவில் வசிப்பவர் ஒருவர், தங்கள் பால்கனியில் இருந்து புகை வருவதைப் பார்த்து விழித்ததாகக் கூறியுள்ளார். மற்றொரு நபர், அல் கூஸின் இரண்டு வெவ்வேறு இடங்களில் இருந்து புகை வந்ததாகக் கண்டதாக பதிவிட்டுள்ளார். துபாய் மால் அருகே துபாய் மெட்ரோவில் பயணம் செய்யும் போது மற்றொரு குடியிருப்பாளர் புகையைக் கண்டதாகக் குறிப்பிட்டுள்ளார். இது போன்று பலரும் இதனை கண்டு சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.

ADVERTISEMENT

துபாயில் இன்று ஏற்பட்ட தீ விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் இன்னும் விசாரித்து வரும் நிலையில், கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு புறமிருக்க நேற்றும் (புதன்கிழமை) அல் கூஸ் பகுதியில் சிறியளவிலான தீ விபத்து ஏற்பட்டு வெள்ளை நிற புகை வெளியேறியதாக தகவல் தெரிவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel