2025 ஆம் ஆண்டுக்கான ஈத் அல் அதா பண்டிகையை முன்னிட்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அரசு ஊழியர்களுக்கு விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அமீரகத்தின் பொதுத்துறை ஊழியர்கள் ஈத் அல் அதாவிற்கு நான்கு நாள் வார விடுமுறையை அனுபவிப்பார்கள் என்று அரசாங்க மனிதவளத்திற்கான கூட்டாட்சி ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, வருகின்ற ஜூன் 5 வியாழக்கிழமை முதல் ஜூன் 8 ஞாயிற்றுக்கிழமை வரை விடுமுறை நீடிக்கும், பின்னர் ஜூன் 9 திங்கள் அன்று பணிகள் மீண்டும் தொடங்கும் என்பது தெரிய வந்துள்ளது.
செவ்வாய்க்கிழமை (நேற்று) மாலை பிறை பார்க்கும் குழுவின் கூட்டத்தைத் தொடர்ந்து, துல் ஹஜ் பிறை காணப்பட்டதாக ஆணையம் உறுதிப்படுத்தியது. இதன் விளைவாக, மே 28 புதன்கிழமை துல் ஹஜ்ஜின் முதல் நாளாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஜூன் 5 வியாழக்கிழமை அரஃபா தினம் அனுசரிக்கப்படும், அதையடுத்து ஜூன் 6, வெள்ளிக்கிழமை ஈத் அல் அதா தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
நீட்டிக்கப்பட்ட விடுமுறை, ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள பொதுத்துறை ஊழியர்கள் தங்கள் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடவும், இஸ்லாமிய நாட்காட்டியில் மிக முக்கியமான விடுமுறை நாட்களில் ஒன்றான ஈத் அல் அதாவுடன் தொடர்புடைய மத மற்றும் கலாச்சார விழாக்களில் பங்கேற்கவும் அனுமதிக்கிறது. இது ஒன்று தனியார் துறை ஊழியர்களுக்கான விடுமுறை அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel