ADVERTISEMENT

அமீரகம் முழுவதும் அதிகரிக்கும் வெப்பநிலை..!! இன்றைய நிலவரம் என்ன..??

Published: 3 May 2025, 9:35 AM |
Updated: 3 May 2025, 9:35 AM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த சில நாட்களாகவே வெயில் அதிகரித்து காணப்படுகின்ற நிலையில், துபாயில் இன்று (மே 3, சனிக்கிழமை) மிதமான வானிலை இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அதன்படி இன்று அமீரகத்தின் உள் பகுதிகளில் வெப்பநிலை 42°C முதல் 46°C வரை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் கடலோரப் பகுதிகள் மற்றும் தீவுகளில் அதிகபட்சமாக 39°C முதல் 44°C வரை வெப்பநிலை பதிவாகக்கூடும். மலைப்பகுதிகளில், வெப்பநிலை சற்று குறைவாகவே இருக்கும், 32°C முதல் 39°C வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

ADVERTISEMENT

அமீரகத்தின் தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) வெளியிட்ட அறிக்கையின் படி, நேற்று காலை நாட்டிலேயே குறைந்தபட்ச வெப்பநிலையாக 16.8°C வரை அல் அய்னின் ரக்னா என்ற பகுதியில் காலை 5:30 மணியளவில் பதிவாகியுள்ளது என்பது தெரிய வந்துள்ளது. அதே நேரத்தில் நேற்று நண்பகலில் அல் அய்னின் ஸ்வீஹானில் அதிகபட்சமாக 46.2°C வெப்பநிலை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்றைய வானிலை நிலவரப்படி, ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் இன்று லேசானது முதல் மிதமான வேகத்தில் காற்று வீசும் என்றும் NCM கணித்துள்ளது. இந்த காற்றுகள் சில நேரங்களில் தூசியை வீசும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. NCM அறிக்கையின் படி, காற்றின் வேகம் 10 முதல் 25 கிமீ/மணி வரை இருக்கும் என்றும், சில நேரங்களில் 35 கிமீ/மணி வரை காற்று வீசும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

இதனுடன் நாடு முழுவதும் உள்ள நகரங்களுக்கான வார இறுதி நாட்களுக்கான முன்னறிவிப்பையும் NCM வெளியிட்டுள்ளது, மாறிவரும் வானிலை நிலைமைகள் குறித்து குடியிருப்பாளர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. NCM வெளியிட்ட வானிலை முன்னறிவிப்பில், வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஐக்கிய அரபு அமீரகத்தில் சீரான மற்றும் நிலையான வானிலை இருக்கும், ஆனால் நாடு முழுவதும் வெப்பநிலை உயரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதையடுத்து, வரவிருக்கும் திங்கட்கிழமை வானிலை தெளிவாகவும் ஓரளவு மேகமூட்டமாகவும் இருக்கும் என்று மையம் கூறியுள்ளது. எனவே, நாடு முழுவதும் வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், குறிப்பாக பிற்பகல் நேரங்களில், நீரேற்றத்துடன் இருக்கவும், நேரடி சூரிய ஒளியைத் தவிர்க்கவும் NCM குடியிருப்பாளர்களை வலியுறுத்துகிறது. வெப்பநிலை வேகமாக அதிகரித்து வருவதால், பொது சுகாதாரத்தைப் பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியம் என்பதையும் அதன் சமீபத்திய புதுப்பிப்பில் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel