அபுதாபியில் உள்ள ஒருவர், கார் வாங்க பணம் செலுத்தியதாகச் சொன்ன 27,000 திர்ஹம்ஸ் தொகையை திரும்பப் பெறுவதற்காக வழக்கு தொடர்ந்த நிலையில், முறையான விற்பனைக்கான போதிய ஆதாரம் அவரிடம் இல்லை என்று நீதிமன்றம் கண்டறிந்ததை அடுத்து அவரது கோரிக்கை தள்ளுபடி செய்யப்பட்ட நிகழ்வு பலரது கவனத்தையும் பெற்றுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த அபுதாபி குடும்பம், சிவில் மற்றும் நிர்வாக உரிமைகோரல் நீதிமன்றம், வழக்கு தொடர்ந்தவர் தெளிவான ஒப்பந்தம் அல்லது சட்டப்பூர்வ உரிமை பரிமாற்றத்தை நிரூபிக்கத் தவறிவிட்டார் என்று தீர்ப்பளித்தது. குறிப்பாக கார் ஒரு வங்கியில் அடமானம் வைக்கப்பட்டு பின்னர் விற்பனையாளரால் மீண்டும் கையகப்படுத்தப்பட்டது என்று நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
அமீரகத்தின் அரபு செய்தி நாளிதழான எமாரத் அல் யூம் வெளியிட்ட இந்த வழக்கு விவரங்களின்படி, காரை வாங்க முற்பட்ட நபர், அந்த காரின் உரிமையை விற்பனையாளர் பின்னர் மாற்றுவார் என்ற புரிதலுடன், வங்கி பரிமாற்றம் மூலம் 16,265 திர்ஹம் மற்றும் 10,735 திர்ஹம் ரொக்கமாக செலுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார். இருப்பினும், வாகனம் வங்கிக் கடனின் கீழ் இருந்ததையும், அந்த கார் திரும்பப் பெறப்பட்டதையும் அவர் கண்டறிந்துள்ளார்.
எனவே இது குறித்து புகாரளித்த அந்த நபர், இந்த வழக்கு தொடர்பாக சம்பந்தப்பட்ட வாட்ஸ்அப் செய்திகள், தெளிவற்ற வாகனப் பதிவு நகல் மற்றும் ஆறு மொழிபெயர்க்கப்படாத வங்கி பரிவர்த்தனைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார். இவற்றை மதிப்பாய்வு செய்த நீதிமன்றம், இந்த ஆவணங்கள் விற்பனை ஒப்பந்தத்திற்கான உறுதியான சான்றாக இல்லை என்று கூறியுள்ளது.
மேலும், இந்த வழக்கில் வங்கி பரிமாற்றங்கள் மட்டுமே செல்லுபடியாகும் பரிவர்த்தனையை உறுதிப்படுத்தாது என்று குறிப்பிட்டதுடன், வழக்கு தொடர்ந்தவரின் கூற்றுக்களை “ஆதரிக்கப்படாதவை மற்றும் ஆதாரமற்றவை” என்றும் நீதிமன்றம் விவரித்துள்ளது. கூடுதலாக, வருமான இழப்புக்கு 5,000 திர்ஹம்ஸ் இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
இந்த வழக்கு விசாரணையில், உறுதியான ஆதாரங்கள் இல்லாமல் வாட்ஸ்அப் செய்தியை மட்டுமே நம்பி கார் வாங்க பணம் அளித்த நிலையில், விற்பனையாளரின் தவறு அல்லது அலட்சியத்திற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று நீதிமன்றம் கூறி, முடிவில் நீதிமன்றம் இந்த வழக்கை முழுவதுமாக தள்ளுபடி செய்ததுடன், அனைத்து சட்டச் செலவுகளையும் வழக்கு தொடர்ந்த நபரே ஏற்கவும் உத்தரவிட்டுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel