ஐக்கிய அரபு அமீரகத்தில் ஈத் அல் அதாவை முன்னிட்டு பொதுத்துறை ஊழியர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்பொழுதுள்ள தனியார் துறை ஊழியர்களுக்கும் ஈத் அல் அதா விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி அமீரகத்தின் மனிதவளம் மற்றும் எமிராட்டிசேஷன் அமைச்சகம் (MoHRE), அரஃபா தினம் மற்றும் ஈத் அல் அதா பெருநாளை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள தனியார் துறை ஊழியர்கள் நான்கு நாள் விடுமுறையைப் பெற உள்ளதாக வியாழக்கிழமை அறிவித்துள்ளது.
இந்த விடுமுறை வருகின்ற ஜூன் 5, வியாழக்கிழமை (துல் ஹஜ் 9) தொடங்கி ஜூன் 8, ஞாயிற்றுக்கிழமை (துல் ஹஜ் 12) வரை தொடரும் என்றும், ஜூன் 9, 2025 திங்கட்கிழமை அன்று பணிகள் அதிகாரப்பூர்வமாக மீண்டும் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அமீரகத்தில் கடந்த மே 27, செவ்வாய்க்கிழமை மாலையில் துல் ஹஜ் பிறை காணப்பட்டதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது, இது இஸ்லாமிய மாதமான துல் ஹஜ் மே 28, புதன்கிழமை தொடங்கும் என்பதைக் குறிக்கிறது. இஸ்லாமிய நாட்காட்டியின் இறுதி மாதத்தின் தொடக்கத்தை உறுதிப்படுத்தும் வகையில், நாடு முழுவதும் பல பிறை காட்சிகளை UAE வானியல் மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் வார விடுமுறை நாட்களை உள்ளடக்கிய நான்கு நாள் விடுமுறை, இந்த வார தொடக்கத்தில் பொதுத்துறைக்கு அறிவிக்கப்பட்ட பொது விடுமுறைக்கு ஏற்ப, தனியார் துறை ஊழியர்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் ஈத் அல் அதாவைக் கொண்டாட நேரம் வழங்கும் என கூறப்படுகின்றது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel