ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த ஆண்டு 2024 ஆம் ஆண்டை விட மிகக் குறைவான மழைப்பொழிவு பதிவாகியுள்ளதாகவும், மேலும் 13 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெப்பமான ஏப்ரல் மாதத்தை பதிவு செய்துள்ளதாகவும் தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) தெரிவித்துள்ளது. இந்த காலநிலையானது மாறிவரும் காற்று மற்றும் மழைப்பொழிவு முறைகளை உள்ளடக்கிய உலகளாவிய வானிலை நிகழ்வான லா நினாவுடன் (La Niña) தொடர்புடையது என்று வானிலை ஆய்வாளர் அகமது எல் கமாலி விளக்கியுள்ளார்.
இந்த வறண்ட காலநிலையை எதிர்த்துப் போராட, ஐக்கிய அரபு அமீரகம் அதன் கிளவுட் சீடிங் திட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகிறது. 2025 ஆம் ஆண்டில் இதுவரை, 110 கிளவுட் சீடிங் (cloud seeding) பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக NCM தெரிவித்துள்ளது. முன்பு, 2024 ஆம் ஆண்டில், ஐக்கிய அரபு அமீரகம் 388 செயல்பாடுகளை நடத்தியது குறிப்பிடத்தக்கது. அமீரகம் மற்றும் அண்டை பகுதிகளில் மேக நிலைமைகளைக் கண்காணிக்கும் ரேடார் தரவுகளின் அடிப்படையில் இரவும் பகலும் பறக்கத் தயாராக இருக்கும் விமானங்களையும் 12 விமானிகளையும் NCM இயக்கி வருகின்றது.
கிளவுட் சீடிங் முறையானது சாதகமான சூழ்நிலையில் 25 சதவீதம் வரை மழைப்பொழிவை அதிகரிக்கும் என்றும், தூசி நிறைந்த சூழல்களில் சுமார் 15 சதவீதம் வரை மழைப்பொழிவை அதிகரிக்கும் என்றும் முந்தைய தரவுகள் காட்டுகின்றன. மேலும் கிளவுட் சீடிங் செய்வதற்கான மேகங்கள் அதிகளவு மேகங்களை கொண்ட குளிர்காலம் (டிசம்பர்-மார்ச்) மற்றும் கோடைகாலத்தில் (ஜூன்-செப்டம்பர்) தோன்றும் என்று எல் கமாலி தெரிவித்துள்ளார். குறிப்பாக, கோடைக்கால பணிகள் கிழக்கு மற்றும் வடக்கு பகுதிகளான ஃபுஜைரா, மசாஃபி, அல் அய்ன் மற்றும் சில நேரங்களில் ராஸ் அல் கைமா, லிவா மற்றும் ஹமீம் ஆகிய பகுதிகளில் கவனம் செலுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.
ஏப்ரல் மாதத்தில் பதிவு செய்யப்பட்ட வெப்பநிலை
ஏப்ரல் 26, 2025 அன்று ஐக்கிய அரபு அமீரகத்தில் 46.6°C வெப்பநிலை பதிவாகியுள்ளது, இது 13 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச ஏப்ரல் வெப்பநிலையாகும் என்று வானிலை ஆய்வாளர் டாக்டர் அகமது ஹபீப் உறுதிப்படுத்தியுள்ளார். இதற்கு முன் கடந்த 2012-ல் அபுதாபியில் உள்ள ருவைஸ் பகுதியில் 46.9°C வெப்பநிலை ஏப்ரல் மாதத்தில் பதிவாகியது குறிப்பிடத்தக்கது.
இதனை தொடர்ந்து அதிகரித்த வெப்பம் மற்றும் குறைந்து வரும் மழைப்பொழிவுடன், நடப்பு ஆண்டானது ஐக்கிய அரபு அமீரகத்தின் வறண்ட மற்றும் வெப்பமான ஆண்டுகளில் ஒன்றாக உருவாகி வருகிறது. குறிப்பாக உள்நாட்டுப் பகுதிகளில், வெப்பநிலை 46–47°C ஐ எட்டக்கூடும் என்பதால், வரவிருக்கும் நாட்கள் அதிக வெப்பமான நாட்களாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel