ADVERTISEMENT

இந்தியா-பாகிஸ்தான் போர் பதற்றம்: அமைதியை நிலைநாட்ட அமீரக வெளியுறவுத்துறை அமைச்சர் அறிவுறுத்தல்..!!

Published: 7 May 2025, 10:54 AM |
Updated: 7 May 2025, 12:29 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைப் பிரதமரும் வெளியுறவு துறை அமைச்சருமான ஷேக் அப்துல்லா பின் சையத் அல் நஹ்யான் அவர்கள், இந்தியாவும் பாகிஸ்தானும் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், மேலும் பிராந்திய மற்றும் உலகளாவிய அமைதிக்கு ஆபத்தை விளைவிக்கும் எந்தவொரு  மோதலையும் தவிர்க்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.

ADVERTISEMENT

கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த கொடிய பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக மே 7 அன்று, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நிர்வாகத்தில் உள்ள காஷ்மீரில் உள்ள ஒன்பது இடங்களை குறிவைத்து, பயங்கரவாத உள்கட்டமைப்பைத் தாக்கியதாகக் கூறி, இந்தியா “ஆபரேஷன் சிந்தூர்” என்ற நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. தற்போது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் கடுமையாக மோசமடைந்துள்ளன.

இரு நாடுகளும் அணு ஆயுதங்களை வைத்திருப்பதால், நடந்து வரும் மோதல் பரந்த பிராந்திய உறுதியற்ற தன்மை குறித்த அச்சத்தை எழுப்பியுள்ளது. இந்நிலையில், பேச்சுவார்த்தை மற்றும் பரஸ்பர புரிதலுக்கான அழைப்புகளுக்கு செவிசாய்க்க வேண்டியதன் அவசியத்தை ஷேக் அப்துல்லா ஒரு அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார், தொடர்ச்சியான பதட்டங்கள் தெற்காசியாவை ஸ்திரமின்மைக்கு உள்ளாக்கும் மற்றும் பிராந்திய பதற்றத்தை தீவிரப்படுத்தும் அபாயம் உள்ளது என்றும் எச்சரித்துள்ளார்.

ADVERTISEMENT

பேச்சுவார்த்தையானது நெருக்கடிகளைத் தீர்ப்பதற்கும் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பை மேம்படுத்துவதற்கும் மிகவும் பயனுள்ள கருவிகள் என்ற ஐக்கிய அரபு அமீரகத்தின் உறுதியான நம்பிக்கையை அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். மேலும் மோதல்களை அமைதியாகத் தீர்ப்பதற்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் இலக்குகளை கொண்ட முயற்சிகள் மற்றும் முன்முயற்சிகளை ஐக்கிய அரபு அமீரகம் தொடர்ந்து ஆதரிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

ADVERTISEMENT