அமீரகத்தில் சமீப காலமாக வெயில் கொளுத்தி வரும் நிலையில் வெப்பநிலையும் தொடர்ந்து அதிகரித்து வந்தது. ஆனால் இன்று (புதன்கிழமை) ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி இருப்பதாக தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) அறிவித்துள்ளது. கடந்த ஒரு சில நாட்களில் அதிகபட்சமாக கடந்த திங்கட்கிழமை அன்று பிற்பகல், ஃபுஜைரா சர்வதேச விமான நிலையத்தில் வெப்பநிலை 46°C வரை பதிவானது குறிப்பிடத்தக்கது.
வெப்பநிலை குறையும் என்று கணித்த போதிலும் தூசிப்புயல் உருவாகும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் NCM வெளியிட்ட வானிலை அறிக்கையின் படி, நாட்டில் இன்றைய பகல்நேர வெப்பநிலை விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
- நாட்டின் உள்பகுதிகளில் 36°C முதல் 40°C வரை
- கடலோரப் பகுதிகளில் 33°C முதல் 37°C வரை
- மலைப்பகுதிகளில் 31°C முதல் 36°C வரை
அத்துடன் இன்றைய தினம் வானிலை நிலைமைகள் தூசி நிறைந்ததாக இருக்கும், மிதமான முதல் வலுவான காற்று சில நேரங்களில் மணிக்கு 50 கிமீ வேகத்தில் வீசும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வலுவான காற்று தூசி மற்றும் மணலை கிளப்பும் மற்றும் சில பகுதிகளில் தெரிவுநிலையைக் (visibility)குறைக்க வழிவகுக்கும் என்றும் குடியிருப்பாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடல் நிலைமைகளைப் பொறுத்த வரை, கடல் அலைகள் மிகவும் சீற்றமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அலைகளின் உயரம் 9 அடி வரை உயரக்கூடும் என்பதால் அரேபிய வளைகுடாவிற்கு NCM கடல் எச்சரிக்கையையும் வெளியிட்டுள்ளது. இந்த எச்சரிக்கை மே 8 ஆம் தேதி மதியம் 12:00 மணி வரை அமலில் இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel