துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA), உம் சுகீம் ஸ்ட்ரீட்டை மேம்படுத்தும் ஒரு பெரிய திட்டத்தை சமீபத்தில் வெளியிட்டுள்ளது, இது சாலை திறனை அதிகரிப்பதையும் பயண நேரத்தை கணிசமாகக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட இந்த வழித்தடம் முடிந்ததும், ஒரு மணி நேரத்திற்கு 16,000 வாகனங்கள் வரை அனுமதிக்கும், மேலும் ஜுமேரா ஸ்ட்ரீட் மற்றும் அல் கைல் சாலைக்கு இடையிலான பயண நேரத்தை 20 நிமிடங்களிலிருந்து வெறும் 6 நிமிடங்களாகக் குறைக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
ஜுமேரா, அல் சஃபா மற்றும் அல் வாஸ்ல் உள்ளிட்ட முக்கிய மாவட்டங்களில் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான பரந்த மாஸ்டர் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த மேம்பாடு அமைகிறது. இது குறித்து RTA இயக்குநர் ஜெனரல் மட்டார் அல் தயர் கூறுகையில், இந்த திட்டம் ஷேக் சையத் சாலை, அல் கைல் சாலை, ஷேக் முகமது பின் சையத் சாலை மற்றும் எமிரேட்ஸ் சாலை ஆகிய நான்கு முக்கிய போக்குவரத்து வழித்தடங்களில் போக்குவரத்து ஓட்டத்தை மேம்படுத்தும் என்றும், இது உம் சுகீம், ஜுமேரா, அல் மனாரா, அல் சுஃபூ, உம் அல் ஷேஃப், அல் பர்ஷா மற்றும் அல் கூஸ் போன்ற முக்கிய குடியிருப்பு மற்றும் வணிகப் பகுதிகளுக்கு நேரடியாகப் பயனளிக்கும் என்றும் தெரிவித்துள்ளார். இவை கூட்டாக இரண்டு மில்லியனுக்கும் அதிகமான குடியிருப்பாளர்களைக் கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
திட்டத்தின் சிறப்பம்சங்கள்:
- உம் சுகீம் ஸ்ட்ரீட்டில் ஆறு முக்கிய சந்திப்புகள் மேம்படுத்தப்படும்.
- 4,100 மீட்டர் நீளம் கொண்ட நான்கு பாலங்கள் மற்றும் மூன்று சுரங்கப்பாதைகள் கட்டப்படும்.
- பாதசாரி நடைபாதைகள், சைக்கிளிங் டிராக்குகள், நிழல் வீதிகள் மற்றும் நகர்ப்புற இடங்கள் சேர்க்கப்படும்.
முக்கிய மேம்பாடுகள்:
- ஜுமைரா ஸ்ட்ரீட்: மேற்பரப்பு இண்டர்செக்ஷனுடன் இரு திசைகளிலும் இருவழிச் சுரங்கப்பாதை.
- அல் வாஸ்ல் ஸ்ட்ரீட்: ஷேக் சையத் சாலையிலிருந்து ஜுமேரா ஸ்ட்ரீட் வரை போக்குவரத்திற்கான இருவழிச் சுரங்கப்பாதை.
- ஷேக் சயீத் சாலை: போக்குவரத்து ஓட்டத்தை மேம்படுத்த இரண்டு பாலங்கள்.
- முதல் அல் கைல் ஸ்ட்ரீட்: அல் பர்ஷாவிலிருந்து ஷேக் சையத் சாலை வரையிலான போக்குவரத்திற்கான ஒரு சுரங்கப்பாதை, மேற்பரப்பு மேம்பாடுகளுடன் நிர்மாணிக்கப்படும்.
துபாயின் வளர்ந்து வரும் மக்கள் தொகை மற்றும் உள்கட்டமைப்பு தேவைகளை ஆதரிக்கும் அதே வேளையில், இந்த முயற்சி ஒட்டுமொத்த இணைப்பு மற்றும் நகர்ப்புற இயக்கத்தை மேம்படுத்தும் என்று RTA உறுதிப்படுத்தியுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel