கடந்த வாரம் ஏற்பட்ட AI171 விமான விபத்தைத் தொடர்ந்து, துபாயிலிருந்து இந்தியாவுக்குச் செல்லும் இரண்டு விமானங்கள் உட்பட பல விமானங்களை ஏர் இந்தியா ரத்து செய்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. மேம்படுத்தப்பட்ட பராமரிப்பு மற்றும் செயல்பாட்டு இடையூறுகள் காரணமாக, அடுத்த சில வாரங்களுக்கு அதன் குறிப்பிட்ட விமானத்தின் (widebody ) சர்வதேச நடவடிக்கைகளை 15% குறைப்பதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.
அதில் துபாயிலிருந்து சென்னைக்கு செல்லும் AI906 விமானம், அதேபோன்று துபாயிலிருந்து ஹைதராபாத் செல்லும் AI2204 விமானம் மற்றும் சென்னையிலிருந்து மும்பைக்கு செல்லும் AI571 விமானம் ஆகியவை ரத்து செய்யப்பட்டதுடன் இது போன்று வேறு சில இடங்களுக்கு இயக்க திட்டமிடப்பட்டிருந்த விமானங்களும் இந்த பட்டியலில் அடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமான நிறுவனம் வெளியிட்ட சமீபத்திய அறிக்கையின் படி, இதுவரை, விமான நிறுவனத்தின் 33 ட்ரீம்லைனர்களில் 26 விமானங்கள் ஆய்வுகளில் தேர்ச்சி பெற்று மீண்டும் சேவையை தொடங்கியுள்ளன. மேலும் டாடா குழுமத்திற்குச் சொந்தமான ஏர் இந்தியாவின், தற்காலிக குறைப்புகள் குறைந்தபட்சம் ஜூலை நடுப்பகுதி வரை நடைமுறையில் இருக்கும் என்றும் கூறியுள்ளது.
கடந்த ஜூன் 12ஆம் தேதியன்று, அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட சிறிது நேரத்திலேயே போயிங் 787 ட்ரீம்லைனர் விமானமான AI171 விபத்துக்குள்ளானதில் 271 பேர் உயிரிழந்தனர். இது கடந்த பத்து ஆண்டுகளிலேயே உலகளவில் மிக மோசமான விமான பேரழிவாக அமைந்தது. இந்த கோர விபத்தில் அதிர்ஷ்டவசமாக ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel