துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையமானது (RTA), ‘Emaar Properties’ உடன் இணைந்து, அதிக பயணிகளைக் கையாள புர்ஜ் கலீஃபா-துபாய் மால் மெட்ரோ நிலையத்தை விரிவுபடுத்த உள்ளது. இந்த திட்டம் முடிக்கப்பட்டதும், ஒரு நாளைக்கு 220,000 பேருக்கு சேவை செய்ய முடியும் என்றும், இது பயணிகளின் திறனை 65% அதிகரிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த மேம்படுத்தலானது நிலையத்தின் பரப்பளவை 6,700 இலிருந்து 8,500 சதுர மீட்டராகவும், மணிநேர திறனை 7,250 இலிருந்து 12,320 பயணிகளாகவும் உயர்த்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து RTA இன் இயக்குநர் ஜெனரலும் நிர்வாக இயக்குநர்கள் குழுவின் தலைவருமான மட்டர் அல் தயேர் பேசுகையில், “இந்த திட்டம் மெட்ரோ சேவைகளுக்கான அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்கிறது மற்றும் 2040 வரை எதிர்கால வளர்ச்சியை எதிர்நோக்குகிறது” என்று கூறியுள்ளார். மேலும், புத்தாண்டு தினத்தன்று மட்டும், 110,000 க்கும் மேற்பட்டோர் நிலையத்தைப் பயன்படுத்துவதாகவும், மேலும் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒட்டுமொத்த பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் 7.5% அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முக்கிய மேம்படுத்தல்களில் பின்வருவன அடங்கும்:
- அதிக நுழைவாயில்கள் மற்றும் பாதசாரி பாலங்கள்
- பரந்த நடைமேடை பகுதிகள்
- கூடுதல் எஸ்கலேட்டர்ஸ் மற்றும் லிஃப்ட்கள்
- நுழைவு மற்றும் வெளியேறுவதற்கு தனித்தனி வாயில்கள்
- வரிசைகளைக் குறைக்க அதிக கட்டண வாயில்கள்
- வருவாயை அதிகரிக்க புதிய வணிக இடங்கள்
- பேருந்துகள், பைக்குகள் மற்றும் இ-ஸ்கூட்டர்களுடன் சிறந்த ஒருங்கிணைப்பு
- மேம்படுத்தப்பட்ட நிலத்தோற்றம் மற்றும் நகர்ப்புற இணைப்பு
பல ஆண்டுகளாக நிலையத்தின் வளர்ச்சி:
2010 இல் திறக்கப்பட்டதிலிருந்து, நிலையம் பயணிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. பயணிகளின் எண்ணிக்கை 2013 இல் 6.13 மில்லியனிலிருந்து 2016 இல் 7.25 மில்லியனாக அதிகரித்துள்ளது. 2022 மற்றும் 2024 க்கு இடையில், பயன்பாடு கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் அதிகரித்துள்ளது, கடந்த ஆண்டு 10.57 மில்லியனுக்கும் அதிகமான பயணிகள் பதிவு செய்யப்பட்டனர். இதன் பொருள் ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 58,000 பேர் நிலையத்தில் மெட்ரோவில் ஏறி இறங்குகிறார்கள்.
2012 இல், 820 மீட்டர் நடைபாதை சேர்க்கப்பட்டது, இது மெட்ரோ நிலையத்தை நேரடியாக துபாய் மாலுடன் இணைக்கிறது. கூடுதல் வசதிக்காக இது 10 நகரும் நடைபாதைகளைக் (travellators) கொண்டுள்ளது. மேலும் மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள், குடியிருப்பாளர்கள் மற்றும் ஸ்ட்ரோலர்களைக் கொண்ட பெற்றோர்களின் தேவைகளைக் கருத்தில் கொண்டு, இது வடிவமைக்கப்பட்டுள்ளதுஎனவும் கூறப்பட்டுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel