ADVERTISEMENT

துபாய்: ஓடும் காரில் இருந்து விழுந்து காயமடைந்த சிறுவன்.. பெற்றோர்களுக்கு எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள்..!!

Published: 18 Jun 2025, 5:34 PM |
Updated: 18 Jun 2025, 5:34 PM |
Posted By: Menaka

துபாயில் ஓடும் காரில் இருந்து விழுந்து ஐந்து வயது சிறுவன் காயமடைந்ததை அடுத்து வாகனங்களுக்குள் குழந்தைகளின் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து துபாய் காவல்துறை மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதிர்ஷ்டவசமாக, குழந்தைக்கு மிதமான காயங்கள் மட்டுமே ஏற்பட்ட நிலையில், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு விரைவாக கொண்டு செல்லப்பட்டதாகத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

என்ன நடந்தது?

இது குறித்து துபாய் காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கைகளின் படி, தனது தாயுடன் காரின் பின்புற இருக்கையில் அமர்ந்திருந்த சிறுவன், திடீரென காரின் கதவைத் திறந்ததால் சாலையில் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த சமயத்தில், கார் குறைந்த வேகத்தில் நகர்ந்ததால் பெரிய காயங்களின்றி சிறுவன் தப்பிக்க உதவியுள்ளது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த அவசர சேவைகள் கூடுதல் சிகிச்சைகளுக்காக பாதிக்கப்பட்ட சிறுவனை மருத்துவமனையில் கொண்டு சேர்த்ததாகக் கூறப்படுகின்றது.

பெற்றோருக்கு காவல்துறை எச்சரிக்கை

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, துபாய் காவல்துறையின் செயல்பாட்டு உதவித் தளபதி மேஜர் ஜெனரல் சைஃப் முஹைர் அல் மஸ்ரூய், குழந்தைகள் பாதுகாப்பு விதிகளைப் புறக்கணிப்பதன் ஆபத்துகளை வலியுறுத்தியுள்ளார். பெற்றோர்கள் மற்றும் ஓட்டுநர்களுக்கு அவர் பின்வரும் அறிவுரைகளை வழங்கியுள்ளார்:

ADVERTISEMENT
  • 4 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு எப்போதும் குழந்தை பாதுகாப்பு இருக்கைகளைப் பயன்படுத்துங்கள்
  • முன் இருக்கையில் அல்லாமல், பின் இருக்கையில் குழந்தைகளை வைத்திருங்கள்
  • அனைத்து பயணிகளும் சீட் பெல்ட்களை அணிவதை உறுதிசெய்யவும்
  • பின்புற கதவுகளில் சைல்ட் லாக் (child lock) அம்சங்களை செயல்படுத்தவும்
  • குழந்தைகளை வாகனங்களில் தனியாக குறிப்பாக கோடை காலங்களில் தனியாக விட்டுவிடாதீர்கள்

கடந்த ஆண்டு ஷார்ஜாவில் 7 வயது சிறுவன் ஒருவன் இறந்தது உட்பட கடந்த கால துயரங்களையும் துபாய் காவல்துறை எடுத்துரைத்துள்ளது. அந்த சிறுவன் அவரது குடும்பத்தினரால் பணியமர்த்தப்பட்ட, உரிமம் இல்லாத ஓட்டுநரால் மணிக்கணக்கில் காருக்குள் மறந்து விடப்பட்ட நிலையில், தாமதமாக கண்டுபிடிக்கப்பட்டதால் குழந்தை உயிர் பரிதாபமாக பறிபோன சம்பவம் குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியது.

பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு விதிகள்

UAE போக்குவரத்துச் சட்டங்களின்படி:

ADVERTISEMENT
  • 4 வயதுக்குட்பட்ட குழந்தைகள் குழந்தை பாதுகாப்பு இருக்கையில் இருக்க வேண்டும்
  • 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பின்னால் அமர வேண்டும்
  • அனைத்து பயணிகளும் சீட் பெல்ட்களை அணிய வேண்டும்
  • இந்த விதிகளைப் பின்பற்றத் தவறினால் 400 திர்ஹம் அபராதம் மற்றும் ஓட்டுநர் உரிமத்தில் நான்கு பிளாக் பாயிண்ட்ஸ் விதிக்கப்படும்

இந்தச் சட்டங்கள் ஓட்டுநர்கள் மற்றும் பயணிகள் இருவருக்கும் பொருந்தும்.

கோடையில் கூடுதல் விழிப்புணர்வு தேவை

அமீரகத்தில் கோடை நெருங்கி வருவதாலும், பயணம் அதிகரிப்பதாலும், இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க துபாய் காவல்துறையின் பொது போக்குவரத்துத் துறை விழிப்புணர்வு பிரச்சாரங்களை முடுக்கிவிட்டுள்ளது. சட்டத்தைப் பின்பற்றுவது மட்டுமல்லாமல், சாலையில் செல்லும் இளம் உயிர்களைப் பாதுகாப்பதற்கும், குழந்தைகள் பாதுகாப்பை தீவிரமாக எடுத்துக்கொள்ளுமாறு அதிகாரிகள் அனைத்து குடும்பங்களையும் வலியுறுத்துகின்றனர்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel