ADVERTISEMENT

சென்னைக்கு சென்ற இண்டிகோ விமானம் அவசரமாக தரையிறக்கம்: ‘Mayday’ அழைப்பை அறிவித்ததாக தகவல்..!!

Published: 21 Jun 2025, 9:18 PM |
Updated: 21 Jun 2025, 9:18 PM |
Posted By: Menaka

கடந்த வியாழக்கிழமை, குவஹாத்தியில் இருந்து சென்னைக்கு 168 பயணிகளுடன் சென்ற இண்டிகோ விமானம், எரிபொருள் மிகவும் குறைவாக இருந்ததால் ‘Mayday’ அழைப்பை அறிவித்த பிறகு, பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஏர்பஸ் A321 விமானம் (விமானம் 6E-6764) மாலை 4:40 மணிக்கு குவஹாத்தியில் இருந்து புறப்பட்டு, மாலை 7:45 மணியளவில் சென்னையில் தரையிறங்க முயன்ற நிலையில், விமானி திடீரென நிறுத்தி மீண்டும் சுற்றிச் செல்ல வேண்டியிருந்ததாகக் கூறப்படுகின்றது.

ADVERTISEMENT

பெங்களூரிலிருந்து சுமார் 35 மைல் தொலைவில் பறந்து கொண்டிருந்தபோது, ​​எரிபொருள் அளவு குறைந்ததால், விமானி ‘Mayday’ அவசரநிலையை அறிவித்து, விமானத்தை பெங்களூருவில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பிவிட்டார். அது இரவு 8:20 மணிக்கு பாதுகாப்பாக தரையிறங்கியது.

பயணத்தின் போது பீதியடைந்த பயணிகள்

விமான நிலைய அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்ட  நிலையில், மருத்துவம் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்ட அவசர சேவைகள் பெங்களூரில் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டன. இந்த பயணத்தின் போது விமானத்தில் இருந்த பயணிகள் பீதியடைந்ததாகவும், பலருக்கு அச்சத்தை ஏற்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

விசாரணையின் ஒரு பகுதியாக இரு விமானிகளும் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நடவடிக்கையை இண்டிகோ இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. வெள்ளிக்கிழமை மற்றொரு சம்பவத்தில், மதுரைக்குச் சென்ற இண்டிகோ விமானத்தில் நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு சென்னைக்குத் திரும்பியது. 68 பயணிகளும் பாதுகாப்பாக இறக்கிவிடப்பட்டனர். கடந்த ஜூன் 12 அன்று, அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளான சில நாட்களுக்குப் பிறகு இந்த அவசரநிலை ஏற்பட்டுள்ளது. விபத்துக்கு முன்னர் அந்த விமானமும் ‘Mayday’ அழைப்பை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

ADVERTISEMENT