ADVERTISEMENT

துபாய் மெட்ரோ ப்ளூ லைன் திட்டம்: எகிறும் வாடகை.. 9 பகுதிகளில் 23% வாடகை உயர்வு..!!

Published: 21 Jun 2025, 6:51 PM |
Updated: 21 Jun 2025, 7:17 PM |
Posted By: Menaka

துபாயில் விரைவில் வரவிருக்கும் மெட்ரோ ப்ளூ லைன் மூலம் இணைக்கப்பட உள்ள ஒன்பது சமூக பகுதிகளில் வாடகை விலைகள் சராசரியாக 23% அதிகரித்துள்ளதாகவும், அடுத்த நான்கு ஆண்டுகளில் இந்தப் பகுதிகளில் வாடகை மேலும் 30% உயரும் என்றும் நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர். இது மெட்ரோவுடன் இணைக்கப்படாத பகுதிகளை விட கணிசமாக அதிகமாகும்.

ADVERTISEMENT

வாடகைகள் எங்கு அதிகமாக உயர்கின்றன?

துபாய் அரசாங்கம் கடந்த 2023 நவம்பரில் இந்தத் திட்டத்தை அறிவித்ததிலிருந்து, இந்த பகுதிகள் வாடகை அதிகரிப்பைக் காண்கின்றன. குறிப்பாக, அகாடமிக் சிட்டியானது ப்ளூ லைன் அறிவிப்பிலிருந்து மிகப்பெரிய வாடகை அதிகரிப்பைக் கண்டதாக பெட்டர்ஹோம்ஸால் பகிரப்பட்ட தரவுகள் மற்றும் சொத்து கண்காணிப்பு மற்றும் உள் புள்ளிவிவரங்களிலிருந்து பெறப்பட்ட தரவுகள் கூறுகின்றன. அதாவது, ஸ்டுடியோ அடுக்குமாடி குடியிருப்பு வாடகைகள் 42,000 திர்ஹம்ஸிலிருந்து 60,000 திர்ஹம்ஸாக உயர்ந்தன, இது 43% அதிகரிப்பாகும் என கூறப்படுகின்றது.

மற்ற பகுதிகளில் வாடகை உயர்வுகள்:

  • துபாய் க்ரீக் ஹார்பர்: 30%
  • அல் வர்கா மற்றும் துபாய் சிலிக்கான் ஒயாசிஸ்: 28%
  • இன்டர்நேஷனல் சிட்டி 1 மற்றும் 2: 22%
  • ராஸ் அல் கோர் இண்டஸ்ட்ரியல் ஏரியா: 21%
  • மிர்திஃப் மற்றும் துபாய் ஃபெஸ்டிவல் சிட்டி: 15%

131 கிமீ பாதையான ப்ளூ லைன், ஒன்பது முக்கிய மாவட்டங்களை இணைக்கும் மற்றும் செப்டம்பர் 2029க்குள் செயல்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. துபாய் 2040 நகர்ப்புற மாஸ்டர் திட்டத்தின்படி இந்த மாவட்டங்களில் 1 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தங்குவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. கடந்த 2009-ல் ரெட் லைன் தொடங்கப்பட்டதிலிருந்து வரலாற்று போக்குகள் மெட்ரோ அணுகலானது சொத்து மதிப்புகளில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதைக் காட்டுகிறது. பெட்டர்ஹோம்ஸ் கூற்றுப்படி, ஒரு நிலையத்திலிருந்து 5 முதல் 10 நிமிட நடைப்பயணத்தில் உள்ள பகுதிகளில் விலைகள் சுமார் 40% உயர்ந்தன, மேலும் வாடகைகள் 14% அதிகரித்தன.

ADVERTISEMENT

இது குறித்து பெட்டர்ஹோம்ஸின் குத்தகை இயக்குனர் ரூபர்ட் சிம்மண்ட்ஸ் பேசுகையில், “துபாய் மெட்ரோவில் ப்ளூ லைன் வருவதால், அப்பகுதியில் அடுத்த நான்கு ஆண்டுகளில் வாடகையில் மேலும் 25% முதல் 30% வரை உயர்வு ஏற்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். இது முதலீட்டாளர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பாகும்” என்று தெரிவித்துள்ளார். குறிப்பாக எதிர்கால நிலையங்களுக்கு அருகிலுள்ள பகுதிகளில், வாடகையில் அதிகரிப்பை தொடரும் என்றும் பெட்டர்ஹோம்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, ஸ்டுடியோ அடுக்குமாடி குடியிருப்புகள் முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்க்கின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

ADVERTISEMENT