கடந்த ஜூன் 12 அன்று நடந்த பயங்கரமான ஏர் இந்தியா விமான விபத்தில் ஒரு பயணி மட்டுமே உயிர் பிழைத்த துயர சம்பவத்தைத் தொடர்ந்து, ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்திய பயணிகளிடையே 11A இருக்கை விரும்பத்தக்க தேர்வாக மாறியுள்ளதாகவும், குறிப்பாக இந்தியாவுக்கான விமானங்களில் 11A சீட்டுக்கு வரவேற்பு பெருகி வருவதாகவும் பயண முகவர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த வாரம் அகமதாபாத்திலிருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் இருந்த 242 பயணிகளில், பிரிட்டிஷ் நாட்டவரான விஸ்வாஷ் குமார் ரமேஷ் மட்டுமே உயிர் பிழைத்தார். இதற்குக் காரணம், விமானத்தில் அவசரகால வெளியேற்றத்திற்கு (emergency exit) அருகில் 11A இருக்கையில் அவர் அமர்ந்திருந்ததால், விபத்துக்குப் பிறகு லேசான காயங்களுடன் தப்பியதாகக் கூறப்படுகிறது.
நூற்றுக்கணக்கான பயணிகளில் ஒரு நபர் மட்டும் உயிர் பிழைத்த கதையானது, இப்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள சில இந்திய பயணிகள் 11A இருக்கையை “அதிர்ஷ்ட இருக்கை” அல்லது பாதுகாப்பான இருக்கையாகக் கருத வழிவகுத்தது, மேலும் அந்த இருக்கையை முன்பதிவு செய்ய கூடுதல் பணம் செலுத்தவும் பயணிகளை தூண்டியுள்ளது என்பது சுவாரஸியமான ஒன்று.
இந்நிலையில், UAE முழுவதும் உள்ள பயண முகவர்கள் 11A இருக்கை அல்லது 11வது வரிசையில் உள்ள பிற இருக்கைகள் குறித்த விசாரணைகள் அதிகரிப்பதாக தெரிவிக்கின்றனர். பயண முகவர்கள் கூறுகையில், “குறிப்பாக இந்திய பயணிகளிடமிருந்து நாங்கள் ஆர்வத்தைக் கண்டிருக்கிறோம். சிலர் 11A இருக்கையை முன்பதிவு செய்ய 200 திர்ஹம்ஸ் அதிகமாக செலுத்தத் தயாராக உள்ளனர்” என்று கூறுகின்றனர்.
கூடுதல் கால் இடவசதி காரணமாக அவசரகால வெளியேறும் இடங்களுக்கு அருகிலுள்ள இருக்கைகள் பெரும்பாலும் பிரீமியமாக வகைப்படுத்தப்படுகின்றன. இருப்பினும், அவை கட்டுப்பாடுகளுடன் வருகின்றன. விமான நிறுவனங்கள் பொதுவாக குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் வயதான பயணிகள் அல்லது குறைந்த இயக்கம் உள்ளவர்களுக்கு, பாதுகாப்பு நெறிமுறைகள் காரணமாக அவற்றை ஒதுக்குவதில்லை என கூறப்படுகின்றது.
‘பாதுகாப்பான இருக்கைகள்’ பற்றி நிபுணர்களின் கருத்து
துபாயைச் சேர்ந்த விமான நிபுணர்களின் கூற்றுப்படி, சில விபத்து சூழ்நிலைகளில் பின்புற இருக்கைகள் பொதுவாக பாதுகாப்பானதாகக் கருதப்படுகின்றன. அனைத்து விமான உள்ளமைவுகளிலும் அவசர வெளியேறும் இடத்தில் 11A இருக்கை இல்லை என்றும் கூறப்படுகின்றது. விமான நிபுணர்கள் இரண்டு விமான விபத்துகளை சுட்டிக்காட்டி இத்தகைய அனுமானங்களை அதிகமாக நம்புவதற்கு எதிராக எச்சரிக்கை விடுக்கின்றனர். அதாவது, ஜெஜு ஏர் விபத்தில், பின்புற இருக்கையில் அமர்ந்த விமான பணிப்பெண்கள் உயிர் பிழைத்தனர்; ஆனால் ஜப்பான் ஏர்லைன்ஸின் 1985 விபத்தில், உயிர் பிழைத்தவர்கள் கேபினின் நடுவில் அமர்ந்திருந்தனர் என்று கூறுகின்றனர்.
எனவே, 11A இருக்கையில் உள்ள நம்பிக்கை என்பது பயணிகளின் பயம் மற்றும் குறியீட்டின் கலவையை பிரதிபலிக்கும் அதே வேளையில், பாதுகாப்பு விதிமுறைகள், விமான வடிவமைப்பு மற்றும் சரியான பணியாளரை பொறுத்து உள்ளது, இருக்கையில் அல்ல என்பதை விமானப் போக்குவரத்து வல்லுநர்கள் வலியுறுத்துகின்றனர்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel