துபாய் ஏர்போர்ட்ஸ் ஆனது, துபாய் சர்வதேச விமான நிலையத்தின் டெர்மினல் 3 இல் ‘DXB Greet & Go’ என்ற புதிய ஸ்மார்ட் பிக்அப் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. பயணிகள் அனுபவத்தை மேம்படுத்துவதையும் நெரிசலைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்ட இந்த சேவை பாரம்பரிய விருந்தினர் உபசரிப்பு முறையை மிகவும் திறமையான, தொழில்நுட்பம் சார்ந்த செயல்முறையுடன் மாற்றுகிறது.
இந்தப் புதிய அமைப்பின் மூலம், முன்பதிவு செய்யப்பட்ட ஹோட்டல், லிமோசின் அல்லது டூர் ஆபரேட்டர் சேவைகளுடன் துபாய்க்கு வரும் பயணிகள் வருகைப் பகுதியில் உள்ள நியமிக்கப்பட்ட கியோஸ்க்களில் தனிப்பயனாக்கப்பட்ட QR குறியீட்டை ஸ்கேன் செய்யலாம். ஸ்கேன் செய்த பிறகு பின்வரும் முக்கிய தகவல்களை அனுகலாம்:
அதில் ஒதுக்கப்பட்ட ஓட்டுநர் மற்றும் வாகன விவரங்கள், கார் பதிவு எண் மற்றும் சரியான பார்க்கிங் இடம் ஆகியவை சரிபார்க்கப்பட்டவுடன், விமான நிலைய ஊழியர்கள் பயணிகளை அவர்களின் வாகனம் மற்றும் நியமிக்கப்பட்ட பிக்அப் பகுதிக்கு அழைத்துச் சென்று, வருகை செயல்முறையை நெறிப்படுத்துவார்கள்.
துபாயை தலைமையிடமாக கொண்டு இயங்கும் எமிரேடஸ் விமான நிறுவனத்தின் பிரத்யேக டெர்மினல் 3 இன் வருகைப் பகுதியில் அமைந்துள்ள DXB Greet & Go சேவை, உலகின் மிகவும் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றான துபாய் ஏர்போர்ட்டிற்கு வரும் பயணிகளின் வருகை நடைமுறையை எளிதாக்கும் மற்றும் விருந்தினர் ஓட்டத்தை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பயணத்தின் ஒவ்வொரு அடியையும் மிகவும் திறமையாகவும் சுவாரஸ்யமாகவும் மாற்றுவதற்கான எங்கள் தொடர்ச்சியான முயற்சிகளில் DXB Greet & Go ஒரு பகுதியாகும் என்று DXB இன் முனைய செயல்பாடுகளின் மூத்த துணைத் தலைவர் எஸ்ஸா அல் ஷம்சி கூறியுள்ளார்.
இந்த அமைப்பு தற்போது உரிமம் பெற்ற ஹோட்டல்கள், லிமோசின் ஆபரேட்டர்கள் மற்றும் துபாயில் உள்ள சுற்றுலா நிறுவனங்களுக்கு கிடைக்கிறது. இந்த வணிகங்கள் தங்கள் ஓட்டுநர்கள் மற்றும் வாகனங்களை DXB Greet & Go போர்ட்டலில் பதிவுசெய்து, வருகை தரும் விருந்தினர்களுக்கு தங்கள் பயணத்திற்கு முன் தனிப்பயன் QR குறியீட்டை அனுப்பலாம்.
உலகளாவிய தரநிலைகளுக்கு ஏற்ப தடையற்ற மற்றும் நவீனமயமாக்கப்பட்ட வருகை அனுபவத்தை பயணிகளுக்கு வழங்கும் துபாய் விமான நிலையத்தின் இலக்கை ஆதரிக்கும் வகையில் இந்த முயற்சி தொடங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel