துபாயில் ஒரு சட்டப்பூர்வமான கடல்சார் சேவை வழங்குநராகக் காட்டிக் கொண்ட ஒரு நிறுவனம், 25 மில்லியனுக்கும் அதிகமான திர்ஹம்களில் பல ஐக்கிய அரபு அமீரக வணிக நிறுவனங்களை மோசடி செய்த சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ‘Rak Marine Services’ என்ற நிறுவனம், இந்த மோசடி செயலில் ஈடுபட்டு திடீரென செயல்பாடுகளை நிறுத்திவிட்டு காணாமல் போனதாகவும், நிலுவைத் தொகைகளை செலுத்தாமல், பிந்தைய தேதியிட்ட காசோலைகளை (post-dated cheque) வழங்கி ஏமாற்றியதாகவும் பாதிக்கப்பட்ட சப்ளையர்கள் தெரிவிக்கின்றனர்.
தேராவில் உள்ள அல் மக்தூம் சாலையில் இருக்கும் அல் ரீம் டவரில் உள்ள 604–606 அலுவலகங்களில் செயல்பட்டு வந்த ராக் மரைன், வலைத்தளம் மற்றும் கப்பல் பழுதுபார்ப்பு, உற்பத்தி, உபகரணங்கள் வாடகை மற்றும் மனிதவள சேவைகளை வழங்குவதாகக் கூறும் ஆவணங்களுடன் ஒரு புகழ்பெற்ற கப்பல் விற்பனையாளர் மற்றும் சேவை வழங்குநராக தன்னைக் காட்டிக் கொண்டுள்ளது. ஆனால் நிறுவனம் சிறிய முன்பண பரிவர்த்தனைகளுக்குப் பிறகு பெரிய ஆர்டர்களை வைப்பது, பின்னர் பெரும்பாலான பணம் செலுத்தப்படுவதற்கு முன்பே காணாமல் போவது என மோசடி செய்ததாகக் குற்றம் சாட்டப்படுகிறது.
ஜூலை 10 ஆம் தேதி, பிந்தைய தேதியிட்ட பல காசோலைகள் அனுமதி பெறுவதற்கு சற்று முன்பு, நிறுவனம் தனது அலுவலகங்களை காலி செய்ததாகக் கூறப்படுகிறது. மேலும், தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதால், நிறுவன பிரதிநிதிகளைத் தொடர்பு கொள்ளும் முயற்சிகளும் தோல்வியடைந்துள்ளன.
பணம் செலுத்தப்படாத சப்ளையர்களின் பட்டியலில் உணவு விற்பனையாளர்கள், மின்னணு விற்பனையாளர்கள், கட்டுமானப் பொருட்கள் வழங்குநர்கள் மற்றும் பயண நிறுவனங்கள் அடங்கும். காணாமல்போன பொருட்களில் இறால், கோழி, லேப்டாப்கள், ஐபோன்கள், மசாலாப் பொருட்கள், வாட்டர் ஹீட்டர்கள், லாஜிஸ்டிக்ஸ் பொருட்கள் மற்றும் 850 க்கும் மேற்பட்ட சர்வதேச விமான டிக்கெட்டுகள் ஆகியவையும் அடங்கும்.
மேலும் இதன் துணை நிறுவனங்களான ‘Rak Impex Goods Wholesalers’ மற்றும் ‘Rak Facility’ ஆகியவையும் இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக இருந்ததாக பாதிக்கப்பட்ட சப்ளையர்கள் தெரிவித்துள்ளனர். மூன்று நிறுவனங்களையும் இப்போது தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும், அவற்றின் அலுவலகங்கள் பூட்டப்பட்டு கிடங்குகள் காலியாக உள்ளன எனவும் கூறப்படுகின்றது.
ஊடக அறிக்கைகளின் படி, ஒரு பகிரப்பட்ட Google Drive-ல் பாதிக்கப்பட்ட 95 நிறுவனங்களின் பெயர்கள் உள்ளன, அவற்றின் மொத்த செலுத்தப்படாத நிலுவைத் தொகை 25 மில்லியன் திர்ஹம்ஸ்க்கும் அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவர்கள் முன்வருவதால் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாதிக்கப்பட்ட சப்ளையர்கள்
துபாயைச் சேர்ந்த சப்ளையர் ஆண்ட்ரி பலுகின் என்பவர், நிறுவனத்தின் இருப்பிடம் மற்றும் கிடங்கை உறுதிசெய்த பிறகு 90,000 திர்ஹம்ஸ் மதிப்புள்ள 300 வாட்டர் ஹீட்டர்களை டெலிவரி செய்ததாவும், ஆனால் டெலிவரிக்குப் பிறகு காசோலைகள் சிறிது நேரத்திலேயே பவுன்ஸ் ஆனதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த மிகப்பெரிய மோசடி பல தொழில்களை பாதித்துள்ளது. விஸ்டா மரைடைம் டிராவல்ஸ் நிறுவனம் 150 சர்வதேச டிக்கெட்டுகள் மற்றும் ஹோட்டல்களை முன்பதிவு செய்த பிறகு 178,000 திர்ஹம் இழந்ததாகக் கூறியது. ஜூன் 5 முதல் ஜூலை 10 வரை வழங்கப்பட்ட 707 விமான டிக்கெட்டுகளில் 670,000 திர்ஹம் இழப்பு ஏற்பட்டதாக மற்றொரு பெயரிடப்படாத பயண நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த டிக்கெட்டுகளில் பல பின்னர் மூன்றாம் தரப்பினருக்கு மறுவிற்பனை செய்யப்பட்டதாகவும் கூறுகின்றனர்.
“அவர்களிடம் 10,000 ஊழியர்கள் இருப்பதாகவும், ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கான டிக்கெட்டுகள் தேவை என்றும் அவர்கள் எங்களிடம் கூறினர். அவர்களின் அலுவலகங்கள் தொழில்முறை ரீதியாகத் தோன்றின. பின்னர் அவர்கள் பணம் செலுத்துவதை தாமதப்படுத்தத் தொடங்கினர் ”என்று ஒரு பயண நிறுவன மேலாளர் விவரித்துள்ளார்.
உணவு சப்ளையர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். 220,000 திர்ஹம் மதிப்புள்ள பொருட்களை வழங்கிய ஒடெசா மரைன் ஷிப்சாண்ட்லர்ஸின் பொது மேலாளர் பாதுஷா, “காசோலைகள் திரும்பியபோது, நாங்கள் அல் அவீரில் உள்ள அவர்களின் குளிர்பதனக் கிடங்கிற்கு விரைந்தோம். அது காலியாக இருந்தது. அவர்களின் சஜ்ஜா கிடங்கும் அப்படித்தான். அப்போதுதான் நாங்கள் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்தோம்,” என்று நிகழ்வைப் பகிர்ந்து கொண்டார்.
இதுபோல, மோசடியால் பாதிக்கப்பட்ட சில சப்ளையர்கள் அல் முரக்காபத் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர், ஆனால் காசோலைகள் அதிகாரப்பூர்வமாக திரும்பும் வரை காத்திருக்குமாறும், மற்றவர்களுக்கு இந்த விஷயம் சிவில், குற்றவியல் அல்ல என்று அதிகாரிகள் அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகின்றது.
நிறுவனத்துக்கு எதிராக புகார்கள் குவிந்ததை அடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் ராக் மரைன் VAT சான்றிதழ்கள் மற்றும் தணிக்கை அறிக்கைகள் உள்ளிட்ட போலி ஆவணங்களை சமர்ப்பித்து வந்தது கண்டறியப்பட்டது. ராக் மரைன் சர்வீசஸுடன் தொடர்புடைய தணிக்கை நிறுவனம், இதேபோன்ற சூழ்நிலைகளில் காணாமல் போன பிற நிறுவனங்களுக்கான நிதிகளை முன்னர் தயாரித்ததும் வெளிச்சத்திற்கு வந்தது.
இந்நிலையில், இந்த நிறுவனத்தால் ஷார்ஜாவில் வாடகைக்கு எடுக்கப்பட்ட 4,000 சதுர அடி கிடங்கு மட்டும் ரசாயனங்கள் மற்றும் உறைந்த உணவு உள்ளிட்ட பொருட்களுடன் பூட்டியே உள்ளது. அதாவது வாடகைக்கான இரண்டாவது காசோலை பவுன்ஸ் ஆனபோது, நான் அந்த இடத்தைப் பூட்டினேன், அவர்கள் ஒருபோதும் திரும்பி வரவில்லை,” என்று அதன் உரிமையாளர் ஷாருக் ஷபீர் என்பவர் கூறியுள்ளார்.
பேசத் தயங்கும் வர்த்தகர்கள்
ஒருபுறம், மோசடியில் பணத்தை இழந்த சப்ளையர்களின் புகார்கள் குவிந்தாலும், பல வர்த்தகர்கள் நற்பெயருக்கு சேதம் ஏற்படும் என்ற பயத்தில் பகிரங்கமாகப் பேசத் தயங்குவதாகவும் கூறப்படுகின்றது. பாதிக்கப்பட்ட 220 க்கும் மேற்பட்ட தரப்பினர் தங்கள் அடுத்த நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கவும் புதுப்பிப்புகளைப் பகிர்ந்து கொள்ளவும் ஒரு வாட்ஸ்அப் குழுவை உருவாக்கியுள்ளனர்.
இதை நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லுமாறு எங்களுக்குச் சொல்லப்பட்டுள்ளது, ஆனால் சட்ட கட்டணங்கள் அதிகம், மேலும் இழந்த பணத்தை மீட்பது நிச்சயமற்றது” என்று வர்த்தகர்கள் தரப்பில் தெரிவிக்கின்றனர் என்றும் பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர். அமீரகத்தில் இதேபோன்ற மோசடிகளின் கீழ் பல நிறுவனங்கள் ஏமாற்றப்படுவது தொடர்கதையாகி வருகிறது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel