நாடு முழுவதும் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் இன்றைய தினம் (புதன்கிழமை), ஐக்கிய அரபு அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்று வீசும் என தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) வானிலை எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. காற்றின் வேகம் மணிக்கு 40 கிமீ வேகத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, தூசி மற்றும் மணலுடன் கூடிய புழுதிக்காற்றின் விளைவாக, சில கடலோர மற்றும் உட்புற பகுதிகளில் தெரிவுநிலை (visibility) 2,000 மீட்டருக்கும் குறைவாகக் குறையும் என எச்சரித்துள்ளது.
இந்த எச்சரிக்கை காலை 8:45 மணி முதல் மாலை 5:00 மணி வரை அமலில் உள்ளது, மேலும் கிழக்குப் பகுதிகளில் கடுமையான வெப்பம் மற்றும் வெப்பச்சலன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் முந்தைய வானிலை முன்னறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் தெரிவுநிலை குறைதல் மற்றும் சவாலான வானிலையினால் வாகனம் ஓட்டும் நிலைமைகளைக் கருத்தில் கொண்டு, அபுதாபி காவல்துறை வாகன ஓட்டுநர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு வலியுறுத்தியுள்ளது.
“அதிக காற்று மற்றும் தூசியால் ஏற்படும் தெரிவுநிலை குறைவாக இருப்பதால், ஓட்டுநர்கள் எச்சரிக்கையாக இருக்கவும் வேகத்தைக் குறைக்கவும் நாங்கள் அறிவுறுத்துகிறோம்,” என்று காவல்துறை அதன் அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும், “உங்கள் பாதுகாப்பிற்காகவும் சாலையில் உள்ள மற்றவர்களின் பாதுகாப்பிற்காகவும், வாகனம் ஓட்டும்போது மொபைல் போன்களைப் பயன்படுத்துவதையோ அல்லது வீடியோக்களை எடுப்பதையோ தவிர்க்கவும்.” என்றும் அந்த அறிக்கையில் கூறியுள்ளது.
அத்துடன் முடிந்தவரை வீட்டிலேயே இருக்கவும், வெளியில் தளர்வான பொருட்களைப் பாதுகாக்கவும், அதிகாரப்பூர்வ சேனல்கள் மூலம் வானிலை புதுப்பிப்புகளைக் கண்காணிக்கவும் அதிகாரிகள் குடியிருப்பாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel