ADVERTISEMENT

சாதனை எண்ணிக்கையிலான பயணிகளைப் பதிவு செய்த DXB: துபாய் ஏர்போர்ட்ஸ் வெளியிட்ட அறிக்கை..!!

Published: 29 Jul 2025, 8:06 PM |
Updated: 29 Jul 2025, 8:09 PM |
Posted By: Menaka

துபாய் சர்வதேச விமான நிலையம் (DXB) 2025-ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் சுமார் 46 மில்லியன் பயணிகளைக் கண்டதாக அறிவித்துள்ளது. இது கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் பிராந்திய பதட்டங்களால் ஏற்பட்ட விமான இடையூறுகள் இருந்தபோதிலும், இதுவரை இல்லாத அளவுக்கு பரபரப்பான முதல் பாதியைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடதக்கதாகும்.

ADVERTISEMENT

இது தொடர்பாக துபாய் ஏர்போர்ட்ஸ் வெளியிட்ட அறிக்கையின்படி, ஜனவரி மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில் உலகின் பரபரப்பான சர்வதேச விமான நிலையம் ஆண்டுக்கு ஆண்டு 2.3% வளர்ச்சியைக் கண்டது. இரண்டாவது காலாண்டில் மட்டும், விமான நிலையம் 22.5 மில்லியன் பயணிகளைக் கையாண்டதாகக் கூறப்படுகிறது, இது கடந்த ஆண்டு இதே காலத்துடன் ஒப்பிடும்போது 3.1% அதிகரிப்பைக் குறிக்கிறது. இவற்றில் ஏப்ரல் மாதம் 8 மில்லியன் பயணிகளுடன் காலாண்டின் பரபரப்பான மாதமாகத் தனித்து நிற்கின்றது. இது DXB இன் அதிகபட்ச ஏப்ரல் மாத சாதனையாக அமைந்துள்ளது.

11 நாள் ஈரான்-இஸ்ரேல் மோதல் காரணமாக பல வளைகுடா நாடுகளில் வான்வெளி மூடல்கள் ஏற்பட்ட போதிலும், DXB வலுவான பயணிகள் ஓட்டத்தை பராமரித்துள்ளது. அத்துடன் கடந்த 6 மாதங்களில் மாதத்திற்கு சராசரியாக 7.7 மில்லியன் பயணிகள் மற்றும் 254,000 தினசரி பயணிகள் பயணம் செய்துள்ளனர். இவற்றில் 8.5 மில்லியன் பயணிகளுடன் ஜனவரி மாதம் உச்ச மாதமாக இருந்தது, இது விமான நிலையத்தில் இதுவரை பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச மாதாந்திர எண்ணிக்கையாகும்.

ADVERTISEMENT

இது பற்றி துபாய் விமான நிலையங்களின் தலைமை நிர்வாக அதிகாரி பால் கிரிஃபித்ஸ் பேசுகையில், “பிராந்திய சவால்களின் காலகட்டத்தில் DXB இன் தொடர்ச்சியான வளர்ச்சி துபாய் மற்றும் அமீரகத்தின் வலிமையைக் காட்டுகிறது. பயண சேவையை சீராகவும் உலகளாவிய இணைப்புகளை அப்படியே வைத்திருக்கும் அதே வேளையில் எங்கள் குழுக்கள் இடையூறுகளையும் சமாளித்தன” என்று விமான நிலையத்தின் மீள்தன்மையைப் பாராட்டிப் பேசியுள்ளார்.

DXBயின் எண்ணிக்கைகள்

  • சேவை செய்யப்படும் இடங்கள்: 107 நாடுகளில் 269க்கும் மேற்பட்ட நகரங்கள்
  • இயக்கப்படும் விமான நிறுவனங்கள்: 92க்கும் மேற்பட்ட சர்வதேச விமான நிறுவனங்கள்
  • மொத்த விமானங்கள் (ஜனவரி-ஜூன்): 222,000

சிறந்த பயண சந்தைகள்

1. இந்தியா – 5.9 மில்லியன் பயணிகள்
2. சவுதி அரேபியா – 3.6 மில்லியன்
3. இங்கிலாந்து – 3 மில்லியன்
4. பாகிஸ்தான் – 2.1 மில்லியன்
5. அமெரிக்கா – 1.6 மில்லியன்

ADVERTISEMENT

லண்டன் 1.8 மில்லியன் பயணிகளுடன் மிகவும் பரபரப்பான நகர இலக்காக இருந்தது, அதைத் தொடர்ந்து ரியாத் (1.5 மில்லியன்), மும்பை (1.2 மில்லியன்), ஜெத்தா மற்றும் புது தில்லி (தலா 1.1 மில்லியன்), மற்றும் இஸ்தான்புல் (982,000) ஆகியவை உள்ளன.

பயணிகள் செயலாக்க நேரங்கள்:

  • 99.2% பேர் புறப்படும் (departure ) பாஸ்போர்ட் கட்டுப்பாட்டை 10 நிமிடங்களுக்குள் கடந்தனர்
  • 98.4% பேர் 15 நிமிடங்களுக்குள் வருகையை அனுமதித்தனர்
  • 98.7% பேர் 5 நிமிடங்களுக்குள் செக்யூரிட்டி செக்-இன்களை முடித்தனர் என்று துபாய் ஏர்போர்ட்ஸ் தனது 2025 முதல் பாதி அறிக்கையில் தெரிவித்துள்ளது.

2025 ஆம் ஆண்டின் பிற்பகுதிக்கான கணிப்பு:

இந்த கோடையின் பிற்பகுதியிலும் குளிர்காலத்திலும் பயண நடவடிக்கைகளில் அதிகரிப்பு இருக்கும் என்று கிரிஃபித்ஸ் தெரிவித்துள்ளார், இது பொழுதுபோக்கு, விளையாட்டு மற்றும் வணிகம் ஆகியவற்றில் முக்கிய நிகழ்வுகளால் இயக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், துபாய் ஏர்ஷோ 2025 முந்தைய வருகை சாதனைகளை முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் ஒரு முக்கிய வரவிருக்கும் நிகழ்வாக அவர் எடுத்துரைத்துள்ளார்.

DXB இப்போது ஆண்டுக்கு மொத்தம் 96 மில்லியன் பயணிகளை எதிர்பார்க்கிறது. கூடுதலாக, விமான நிலையம் 85 மில்லியனுக்கும் அதிகமான லக்கேஜ்களை செயலாக்க இலக்கு வைத்துள்ளது, இது 2024 இல் நிர்ணயிக்கப்பட்ட 81.2 மில்லியன் என்ற முந்தைய சாதனையை முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel