கிட்டத்தட்ட 1 கிலோ எடையும், பெரிய அளவும் கொண்ட ஒரு வெங்காயம், துபாயின் அல் அவீர் சந்தையில் வாடிக்கையாளர்கள் மற்றும் உணவக உரிமையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் இந்த மிகப்பெரிய வெங்காயம் ப்ளூம் மார்க்கெட்டில் ஒரு கிலோ 2.5 திர்ஹம்ஸ்க்கு விற்கப்படுகிறது. இந்த மிகப்பெரிய வெங்காயம், ஒரு வழக்கமான வெங்காயத்தை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு பெரியது என்று வியாபாரிகள் கூறுகின்றனர்.
அங்குள்ள நீண்டகால விற்பனையாளர் கூறுகையில், “நான் 18 ஆண்டுகளாக அல் அவீரில் வேலை செய்து வருகிறேன், இவ்வளவு பெரிய வெங்காயத்தை நான் பார்த்ததில்லை. இது கிட்டத்தட்ட ஒரு குழந்தையின் முகத்தின் அளவு.” என்று இரண்டு கைகளாலும் வெங்காயத்தை உயர்த்திப் பிடித்தவாறு தெரிவித்துள்ளார். மேலும், இந்த அசாதாரண வெங்காயத்தைப் பார்க்க மக்கள் ஆவலுடன் சந்தைக்கு வருவதாகவும், அவற்றை புகைப்படங்கள் எடுப்பதுடன் ஒன்றை வாங்கிச் செல்வதாகவும் கூறியுள்ளார். சிலர் அதைத் தொடும் வரை அது உண்மையானது என்று நம்புவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அவரின் கூற்றுப்படி, வெங்காயம் பெரியது மட்டுமல்ல, அதன் சுவையும் வேறுபட்டது. “இது அதிக நீர்ச்சத்து கொண்டது, இனிப்பானது மற்றும் லேசானது, நீங்கள் அதை வெட்டும்போது உங்களை அழ வைக்காது,” என்று விளக்கியுள்ளார். அதன் பெரிய அளவு மற்றும் ஜூசி அமைப்பு காரணமாக, வெங்காயம் உணவக உரிமையாளர்களிடையேயும் சமையல்காரர்களிடையேயும் பிரபலமடைந்து வருகிறது குறிப்பிடத்தக்கது. இது சாலட்களை மேம்படுத்துவதாகவும், கிரேவிகளில் நல்ல ருசியாக இருப்பதாகவும் அவர்கள் கூறுவதாக குறிப்பிட்டுள்ளார். ஆக மொத்தம், இந்த வெங்காயம் அளவில் மட்டுமின்றி சுவையிலும் தனித்து நிற்பதாக வியாபாரிகள் குறிப்பிடுகின்றனர்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel