ADVERTISEMENT

UAE: சமூக ஊடகங்களில் மற்றொரு நபரை அவமதித்தவருக்கு 50,000 திர்ஹம் அபராதம் விதித்த நீதிமன்றம்..!!

Published: 24 Jul 2025, 7:17 PM |
Updated: 24 Jul 2025, 7:17 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தில் சமூக ஊடகங்களில் மற்றொரு நபரை அவமதித்ததற்காக ஒருவருக்கு 50,000 திர்ஹம் இழப்பீடு வழங்க நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பானது, பிற நபர்கள் குறித்து பொதுமக்களால் ஆன்லைன் தளங்களில் வெளிப்படுத்தப்படும் கருத்துகள் நிஜ வாழ்க்கையில் எவ்வாறு கடுமையான விளைவுகளுக்கு வழிவகுக்கும் என்பதை எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளது.

ADVERTISEMENT

அபுதாபியில் உள்ள குடும்பம், சிவில் மற்றும் நிர்வாக உரிமைகோரல் நீதிமன்றம், குற்றம்சாட்டப்பட்ட நபரின் ஆன்லைன் கருத்துக்கள் மற்ற நபருக்கு தார்மீக தீங்கு விளைவிப்பதாகவும், அவரது நற்பெயர் மற்றும் நல்வாழ்வை சேதப்படுத்துவதாகவும் கூறி இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. அத்துடன், பாதிக்கப்பட்டவரின் அனைத்து சட்ட மற்றும் நீதிமன்றம் தொடர்பான செலவுகளையும் குற்றம்சாட்டப்பட்டவர் ஏற்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆன்லைன் தளத்தில் தன்னைப் பற்றிய தகாத பதிவுகள் குறித்து பாதிக்கப்பட்டவர், பதிவிட்ட நபருக்கு எதிராக நீதிமன்றத்தில் அவதூறு புகார் அளித்ததை தொடர்ந்து இந்த வழக்கு தொடங்கியுள்ளது. இந்த குற்றத்திற்காக ஒரு குற்றவியல் நீதிமன்றம் ஏற்கனவே அந்த நபருக்கு 10,000 திர்ஹம் அபராதமும் விதித்துள்ளது. ஆயினும், பாதிக்கப்பட்ட நபர் அந்த தீர்ப்பின் அடிப்படையில் 200,000 திர்ஹம் இழப்பீடு கோரி மீண்டும் ஒரு சிவில் வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.

ADVERTISEMENT

இந்த வழக்கை விசாரித்த சிவில் நீதிமன்றம் முந்தைய குற்றவியல் தீர்ப்பு அந்த நபரின் குற்றத்தை நிரூபித்ததாகக் கூறியதுடன், அவமானம், உணர்ச்சி ரீதியான தீங்கு மற்றும் பாதிக்கப்பட்டவரின் கண்ணியத்திற்கு சேதம் விளைவித்ததை உறுதிப்படுத்தியது. மேலும், அவர் இழப்பீடாக அதிக தொகையை கோரியபோதிலும், அவருக்கு ஏற்பட்ட தீங்கிற்கு 50,000 திர்ஹம்ஸ் நியாயமான தொகை என்பதையும் நீதிமன்றம் முடிவு செய்ததாகக் கூறப்படுகின்றது.

இந்த வழக்கு UAE நீதிமன்றங்கள் ஆன்லைன் நடத்தையை எவ்வளவு தீவிரமாகக் கருதுகின்றன என்பதை எடுத்துக்காட்டுவதாக சட்ட வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். அதாவது நேரில் அவமதிப்பது அல்லது பொது அவதூறு செய்வது போலவே, டிஜிட்டல் தளங்களில் தவறான நடத்தையானது, அபராதம் மற்றும் சட்டப்பூர்வ தண்டனைகளுக்கு வழிவகுக்கும் என்பதை அனைவரும் மனதில் கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.

ADVERTISEMENT

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel