அமீரகத்தில் கடும் கோடைகாலமாக இருந்த போதிலும் கடந்த ஒரு சில நாட்களாக தொடர்ந்து ஆங்காங்கே மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் அல் அய்ன் மற்றும் துபாயின் பல பகுதிகள் உட்பட ஐக்கிய அரபு அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று (திங்கள்கிழமை) பிற்பகலும் மழை பெய்ததாக தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) தெரிவித்துள்ளது. NCM அறிக்கையின் படி, துபாயில் உள்ள மார்காம், அல் குத்ரா, சைஹ் அல் சலாம் மற்றும் அல் லிசாலி ஆகிய இடங்களில் லேசானது முதல் கனமழை பதிவாகியுள்ளது. இதற்கிடையில், அல் அய்னில் உள்ள அல் ஃபகா, உம் அல் ஜுமூல் மற்றும் காத்ம் அல் ஷிக்லா ஆகிய இடங்களிலும் மிதமானது முதல் கனமழை பெய்துள்ளது.
மேலும், நாட்டின் சில பகுதிகளில், குறிப்பாக அல் அய்ன் மற்றும் அல் தஃப்ரா பகுதியைச் சுற்றி வெப்பச்சலன மேகங்கள் உருவாகுவதால் மழைக்கான ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கைகளை NCM வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வந்தாலும், இந்தப் பகுதிகளில் வசிப்பவர்கள் அதிக மழையை எதிர்பார்க்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
இவ்வாறு பல பகுதிகளில் மழை இருந்தபோதிலும், துபாயில் உள்ள சைஹ் அல் சலாம் நாளின் அதிகபட்ச வெப்பநிலையாக 49.8°C ஐப் பதிவு செய்தது. இதற்கு நேர்மாறாக, ஃபுஜைராவின் அல் ஃபர்ஃபாரில் 26.5°C ஆகக் குறைந்த வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதுமட்டுமில்லாமல், ஜூலை 22, செவ்வாய்க்கிழமை இரவு வரை ஈரப்பதமான வானிலை தொடரும் என்றும், குறிப்பாக கடலோர மற்றும் உட்புறப் பகுதிகளில் மூடுபனி உருவாகும் என்றும் NCM கணித்துள்ளது. வானிலை அறிக்கையின் படி, ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் லேசானது முதல் மிதமான காற்று வீசும் என்றும், வேகம் மணிக்கு 40 கிமீ வரை இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel