ஷார்ஜா எமிரேட்டானது வாகன ஓட்டிகளின் நிதி சுமையை குறைக்க அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி ஷார்ஜா அதிகாரிகள், போக்குவரத்து விதிமீறல்களைச் செய்த 60 நாட்களுக்குள் வாகன ஓட்டிகள் அபராதம் செலுத்தினால், போக்குவரத்து அபராதங்களில் 35 சதவீத தள்ளுபடி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளனர். இந்த முயற்சி, விதிமீறல்களை சரியான நேரத்தில் தீர்த்து வைப்பதையும், வாகன ஓட்டிகளின் நிதிச் சுமையைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
அதே நேரத்தில் 60 நாட்களுக்குப் பிறகு ஒரு வருடத்திற்குள் பணம் செலுத்தப்பட்டால், 25 சதவீத தள்ளுபடி பொருத்தும். இருப்பினும், இந்த தள்ளுபடி திட்டம் சில கடுமையான போக்குவரத்து மீறல்களுக்குப் பொருந்தாது என்று அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர். ஷார்ஜாவின் துணை ஆட்சியாளரும் நிர்வாகக் குழுவின் துணைத் தலைவருமான ஷேக் அப்துல்லா பின் சலீம் பின் சுல்தான் அல் காசிமி தலைமையில் நடைபெற்ற ஷார்ஜா நிர்வாகக் கவுன்சில் கூட்டத்தின் போது இந்த முடிவு அறிவிக்கப்பட்டதாக செய்தி அறிக்கைகள் கூறுகின்றன.
போக்குவரத்து அபராத முயற்சிக்கு கூடுதலாக, தொழில்முனைவோருக்கான அரசு சேவை கட்டணங்களில் 50 சதவீத தள்ளுபடிக்கும் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நடவடிக்கை பல்வேறு பொருளாதாரத் துறைகளில் 88 திட்டங்களை உள்ளடக்கியது மற்றும் உள்ளூர் வணிக வளர்ச்சியை ஆதரிக்கும் நோக்கம் கொண்டது எனக் கூறப்பட்டுள்ளது.
தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள 35 சதவீத அபராதத் தள்ளுபடி திட்டம் ஆரம்பத்தில் 2023 இல் ஷார்ஜாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதே போல், அபுதாபி ஆண்டு முழுவதும் இந்த திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது, வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து அபராதங்களில் இதேபோன்ற குறைப்புகளை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel