துபாயின் தனியார் பார்க்கிங் ஆப்பரேட்டர் பார்கோனிக் மற்றும் டோல் ஆப்பரேட்டர் சாலிக் PJSC தங்கள் ஸ்மார்ட் பார்க்கிங் கூட்டாண்மையை தொடர்ந்து விரிவுபடுத்துவதால், அபுதாபியிலும் தடையற்ற, டிக்கெட் இல்லாத பார்க்கிங் அமைப்புகளை தற்பொழுது அறிமுகப்படுத்தப்படவிருக்கின்றன. அபுதாபியில் உள்ள அல் வஹ்தா மால் மற்றும் டல்மா மால் வரும் ஜூலை 18 முதல் தானியங்கி அமைப்பை செயல்படுத்தும் என்று பார்கோனிக் புதன்கிழமை உறுதிப்படுத்தியது. அத்துடன் வாகனங்களை அடையாளம் காணவும், டிக்கெட்டுகள் அல்லது பணம் இல்லாமல் கட்டணம் செலுத்துவதைச் செயல்படுத்தவும் இரு இடங்களிலும் தானியங்கி நம்பர் பிளேட் அங்கீகாரம் (ANPR) கேமராக்கள் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ளன.
பார்கோனிக் வெளியிட்ட விபரங்களின் படி, டல்மா மாலில், வார நாட்களில் முதல் மூன்று மணிநேரம் பார்க்கிங் இலவசம், வார இறுதி நாட்கள் மற்றும் பொது விடுமுறை நாட்களில் நாள் முழுவதும் இலவசம். வார நாட்களில் முதல் மூன்று மணிநேரங்களுக்குப் பிறகு, ஒரு மணி நேரத்திற்கு 10 திர்ஹம் கட்டணம் பொருந்தும். வெளியேறும்போது வாகன உரிமையாளரின் சாலிக் அக்கவுண்ட்டில் இருந்து கட்டணங்கள் தானாகவே கழிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
அல் வஹ்தா மாலைப் பொறுத்தவரை, பார்க்கிங் கட்டணங்கள் இறுதி செய்யப்பட்டு வருவதாக பார்க்கோனிக் தெரிவித்துள்ளது. சாலிக் வழியாக பணம் செலுத்தப்படாது, ஆனால் பார்கோனிக் செயலி, வலைத்தளம் அல்லது மாலில் உள்ள கியோஸ்க்குகள் மூலம் கட்டணத்தைச் செலுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் துபாயில், பணமில்லா மற்றும் டிக்கெட் இல்லாத கட்டண அமைப்பு ஏற்கனவே பின்வரும் இடங்களில் செயல்படுகிறது. அவை
- கோல்டன் மைல் கேலரியா (பாம் ஜுமேரா)
- டவுன் மால் (ஜெபல் அலி மற்றும் துபாய் இன்வெஸ்ட்மென்ட் பார்க்)
- துபாய் ஸ்போர்ட்ஸ் சிட்டி (surface மற்றும் மல்டி லெவல் பார்க்கிங்)
- பாம் மோனோரயில்
இந்த இடங்கள் பார்க்கிங் கட்டணங்களுக்கு சாலிக் அக்கவுண்ட்களை பயன்படுத்துகின்றன, இதனால் வாகன ஓட்டிகள் வரிசையில் காத்திருக்காமல் அல்லது டிக்கெட்டுகளை சேகரிக்காமல் உள்ளே செல்லவும், வாகனங்களை நிறுத்தவும், வெளியேறவும் முடியும். ANPR தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம், இந்த அமைப்பு பார்க்கிங் செயல்திறனையும் பயனர் வசதியையும் மேம்படுத்துகிறது, இது ஸ்மார்ட், இணைக்கப்பட்ட நகர்ப்புற இயக்கத்தை நோக்கிய UAE இன் முன்னேற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க படியைக் குறிக்கிறது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel