அபுதாபியில் உள்ள ஒரு உயர் வழக்கு நீதிமன்றம் (Court of Cassation), 13 ஆண்டுகள் வருடாந்திர விடுப்பை பயன்படுத்தாத முன்னாள் ஊழியருக்கு 59,290 திர்ஹம் இழப்பீடு வழங்குமாறு ஒரு முதலாளிக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த நீதிமன்ற வழக்கின் படி, 2009 முதல் ஜூன் 2022 வரை அந்த ஊழியர் நிறுவனத்தில் பணிபுரிந்திருக்கிறார். மேலும் அந்த நேரத்தில் அவர் எந்த வருடாந்திர விடுப்பும் எடுக்கவில்லை என்று கூறப்படுகின்றது. நிறுவனத்தை விட்டு வெளியேறிய பிறகு, பயன்படுத்தாத விடுப்புக்கு இழப்பீடு கோரி அவர் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
அதேசமயம், ஊழியர் விடுப்பு எடுத்தார் அல்லது விடுப்புக்கு பதிலாக பணம் பெற்றார் என்பதற்கான ஆதாரங்களை முதலாளி வழங்கத் தவறிவிட்டதாக கூறப்படுகின்றது. இதன் விளைவாக, நீதிமன்றம் முற்றிலும் ஊழியருக்கு ஆதரவாக தீர்ப்பளித்துள்ளது. இதற்கு முன்னர் ஒரு கீழ் நீதிமன்றம் இழப்பீட்டை இரண்டு வருட விடுப்புக்கு மட்டுமே வழங்க உத்தரவிட்டிருந்தது. இருப்பினும், காசேஷன் நீதிமன்றம் இந்த முடிவை ரத்து செய்து, முழு 13 ஆண்டு காலத்திற்கும் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு வேலைவாய்ப்பு சட்டத்தில் ஒரு முக்கிய முன்னுதாரணத்தை அமைக்கிறது என்று சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இந்தத் தீர்ப்பு துல்லியமான விடுப்பு கண்காணிப்பின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது என்றும், முதலாளிகள் விடுப்பு உரிமைகளை எதிர்காலத்தில் எவ்வாறு நிர்வகிக்கிறார்கள் என்பதில் தாக்கத்தை உண்டாக்கலாம் என்றும் தெரிவிக்கின்றனர். 2021 ஆம் ஆண்டின் 33 ஆம் எண் கூட்டாட்சி ஆணை-சட்டத்தின் பிரிவு 29 மற்றும் 2022 ஆம் ஆண்டின் அமைச்சரவைத் தீர்மானம் எண் 1 இன் கீழ், பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டவுடன் பயன்படுத்தப்படாத விடுப்புக்கு இழப்பீடு பெற உரிமை உண்டு, மேலும் ஊழியர் விடுப்பு எடுத்தாரா அல்லது அதற்கு இழப்பீடு பெற்றாரா என்பதை நிரூபிப்பது முதலாளியின் சட்டப்பூர்வ பொறுப்பு என்று கூறப்படுகின்றது.
இந்த வழக்கில், நிறுவனத்தின் சொந்த பதிவுகள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு விடுமுறையை மட்டுமே காட்டின, எந்த இழப்பீடும் வழங்கப்படவில்லை. இதன் அடிப்படையில், ஊழியருக்கு சாதகமாக தீர்ப்பளித்த நீதிமன்றம், பணியாளரின் இறுதி அடிப்படை சம்பளத்தைப் பயன்படுத்தி நிலுவைத் தொகையைக் கணக்கிட்டு இழப்பீடு வழங்குமாறு உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பு, ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் உள்ள முதலாளிகளுக்கு முறையான ஆவணங்களைப் பராமரித்தல் மற்றும் ஊழியர் உரிமைகளை மதிக்க வேண்டும், இல்லையெனில் கடுமையான சட்ட விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்ற ஒரு தெளிவான எச்சரிக்கையை தெரிவிக்கின்றது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel