ஐக்கிய அரபு அமீரகத்தில் போக்குவரத்து சட்டங்கள் கடுமையாக பின்பற்றப்பட்டு வரும் போதிலும் பலர் விதிமுறைகளை மீறி வருகின்றனர். அந்த வகையில் கடந்த ஆண்டில் மட்டும் சீட் பெல்ட் அணியத் தவறிய பயணிகளுக்கு 44,018 அபராதங்களைப் பதிவு செய்ததாக எமரத் அல் யூம் செய்தி நிறுவன அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
UAE RoadSafetyயின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் தாமஸ் எடெல்மேன், வாகனத்தில் பயணிகள் செய்யும் போக்குவரத்து மீறல்களுக்கு ஒரு வாகன ஓட்டுநர் முழுப் பொறுப்பேற்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.உள்துறை அமைச்சகம் வெளியிட்ட புதிய புள்ளிவிவரங்களைத் தொடர்ந்து அவரது கருத்துகள் வந்துள்ளன. இது குறித்து எடெல்மேன் கூறுகையில், “வாகனத்தில் உள்ள அனைவரையும் கவனித்துக்கொள்வது ஓட்டுநரின் பொறுப்பு. இது ஒரு விமானத்தில் ஒரு கேப்டனின் பங்கைப் போன்றது, விமானத்தில் உள்ள அனைவருக்கும் கேப்டன் முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்கிறார், மேலும் நாம் ஒரு காரை ஓட்டும்போதும் இதே விதி பொருந்தும்,” என்று தெரிவித்துள்ளார்.
ஜூலை 1, 2017 முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் சீட் பெல்ட் சட்டம் நடைமுறையில் உள்ளது, இது முன் மற்றும் பின் இருக்கையில் அமர்ந்திருக்கும் பயணிகள் அனைவரும் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்று வலியுறுத்துகிறது. குழந்தைகளும் வயதுக்கு ஏற்ற கார் இருக்கைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட வேண்டும். இந்த விதிமுறைகள் இருந்தபோதிலும், குறிப்பாக பின் இருக்கையில் அமர்ந்திருக்கும் பயணிகள் தொடர்ந்து விதிகளை புறக்கணித்து வருவதால் அமலாக்கம் கடினமாகவே உள்ளது.
எனவே, வாகனங்களில் இருப்பவர்களின் பாதுகாப்பற்ற நடத்தையை புறக்கணிக்க வேண்டாம் என்று எடெல்மேன் ஓட்டுநர்களை வலியுறுத்தியுள்ளார். “நமது வாகனங்களில் பயணிகளின் தவறான நடத்தை இருந்தால், வாகன ஓட்டிக்கு அபராதம் விதிக்கப்பட வேண்டும். விதிகளை நிர்ணயிப்பதற்கும், அனைவரும் அவற்றைப் பின்பற்றுவதை உறுதி செய்வதற்கும் ஓட்டுநர் தான் பொறுப்பு,” என்று அவர் விளக்கியுள்ளார்.
சீட் பெல்ட்கள் உயிர்காக்கும்
சீட்பெல்ட்கள் பெரியவர்களுக்கு ஏற்படும் 40 முதல் 60 சதவீத விபத்துகளில், தாக்கத்தைப் பொறுத்து மரணம் அல்லது கடுமையான காயத்தின் அபாயத்தைக் குறைக்கின்றன என்று சீட் பெல்ட்களை அணிவதன் முக்கியத்துவத்தை எடெல்மேன் வலியுறுத்தியுள்ளார். மேலும், குழந்தைகளுக்கு, சரியாக நிறுவப்பட்ட கட்டுப்பாடுகள் 80 சதவீதம் வரை இறப்புகள் மற்றும் கடுமையான காயங்களைத் தடுக்கலாம் என்றும் எடுத்துரைத்துள்ளார்.
UAE RoadSafetyயின் ஆராய்ச்சியை மேற்கோள் காட்டி, தோராயமாக 20 சதவீத ஓட்டுநர்கள் மற்றும் முன் இருக்கையில் அமர்ந்திருக்கும் பயணிகள் இன்னும் சீட் பெல்ட்களை அணியத் தவறிவிடுகிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பின் இருக்கையில் இந்தப் பிரச்சினை மிகவும் பரவலாக உள்ளது, பாதிக்கும் மேற்பட்ட பயணிகள் பெல்ட்களைப் பயன்படுத்துவதில்லை. “டாக்ஸிகள், லிமோசின்கள் அல்லது நண்பர்களுடன் சவாரி செய்யும்போது கூட, பெரியவர்கள் பின்புறத்தில் இருக்கை பெல்ட்டை அணியாமல் இருப்பது பொதுவானது. இந்தப் பழக்கம் மாற வேண்டும்,” என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், குழந்தைகளின் பாதுகாப்பு குறித்தும் எடெல்மேன் கவலைகளை எழுப்பியுள்ளார். “பிறந்த குழந்தை முதல் நான்கு வயது வரையிலான குழந்தைகளைக் கொண்ட பெற்றோரில் சுமார் 30 சதவீதம் பேர் குழந்தை இருக்கைகளை (baby seat) வைத்திருக்கவில்லை, இது சட்டப்படி தேவைப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் குழந்தை இருக்கைகளை வைத்திருப்பவர்களில், மூன்றில் ஒரு பங்கு பேர் எப்போதும் அவற்றை சரியாகப் பயன்படுத்துவதில்லை.” என்று அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து சாலைகளைப் பாதுகாப்பானதாக்குவதற்கான முயற்சிகளை ஐக்கிய அரபு அமீரகம் தீவிரப்படுத்தி வருவதால், நிபுணர்கள் சிறந்த பொது விழிப்புணர்வு மற்றும் வலுவான அமலாக்கத்திற்கு அழைப்பு விடுக்கின்றனர். “இறுதியில், பொறுப்பேற்க வேண்டியது ஓட்டுநர்தான்” என்று வலியுர்த்திய எடெல்மேன் “அதனால்தான் வாகன ஓட்டிகள் பொறுப்பேற்க வேண்டும், தங்கள் பயணிகளுக்கு நினைவூட்ட வேண்டும், மேலும் ஒவ்வொரு பயணத்திலும், ஒவ்வொரு முறையும் அனைவரும் சீட்பெல்ட் அணிந்திருப்பதை உறுதி செய்ய வேண்டும்” என்று மீண்டும் அறிவுறுத்தியுள்ளார்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel