ஆன்லைன் தரவுத்தளமான நம்பியோவின் (Numbeo) ‘Safety Index by Country 2025 Mid-Year’ குறியீட்டின்படி, 2025 ஆம் ஆண்டிற்கான உலகின் பாதுகாப்பான நாடாக ஐக்கிய அரபு அமீரகம் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது 85.2 மதிப்பெண்களுடன், அன்டோரா, கத்தார், தைவான் மற்றும் மக்காவோவை விட அமீரகம் முன்னணியில் உள்ளது. இந்த சமீபத்திய அங்கீகாரம் நாட்டின் வலுவான பாதுகாப்பு, குறைந்த குற்ற விகிதங்கள் மற்றும் உயர் வாழ்க்கைத் தரத்தை பிரதிபலிக்கிறது என கூறப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகம் 200 க்கும் மேற்பட்ட தேசிய மக்களுக்கு இரண்டாவது தாயகமாக உள்ளது மற்றும் அதன் பாதுகாப்பான சூழலுக்காக பரவலாக அறியப்படுகிறது. அத்துடன் இது குடியிருப்பாளர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு ஒரு பிரபலமான இடமாக அமைகிறது. மேலும் இந்த ஆண்டின் தொடக்கத்தில், Numbeo-வின் பாதுகாப்பு குறியீட்டில் நாடு இரண்டாவது இடத்தில் இருந்தது, அன்டோரா முதலிடத்தில் இருந்தது, ஆனால் அது இப்போது புதுப்பிக்கப்பட்ட தரவரிசையில் முதலிடத்திற்கு உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
அமீரகத்தை தொடர்ந்து பிராந்தியத்தில், கத்தார் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. அதே நேரத்தில் சவுதி அரேபியா மற்றும் பஹ்ரைன் ஆகியவை முதல் 20 பாதுகாப்பான நாடுகளில் அடங்கும். குவைத் 38வது இடத்தையும், ஜோர்டான் 54வது இடத்தையும் பிடித்துள்ளன. பாகிஸ்தான் 62வது இடத்தையும், பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தியா முறையே 66 மற்றும் 67வது இடத்தைப் பிடித்துள்ளன. மேலும் அபுதாபி உலகின் பாதுகாப்பான நகரமாக 88.2 மதிப்பெண்களுடன் தரவரிசைப்படுத்தப்பட்டது மற்றும் உலகளவில் மிகக் குறைந்த குற்ற நிலைகளை பதிவு செய்திருக்கின்றது. துபாய் சிறப்பாக செயல்பட்டு, பாதுகாப்பான நகரங்களில் ஐந்தாவது இடத்தைப் பிடித்தது.
வலுவான சட்ட அமலாக்கம், மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் நிலையான நிர்வாகம் மூலம் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான ஐக்கிய அரபு அமீரகத்தின் தொடர்ச்சியான முயற்சிகளை இந்த தரவரிசை எடுத்துக்காட்டுகிறது என தெரிவிக்கப்படுகின்றன. இதன் மூலம், வாழ்வதற்கும் வேலை செய்வதற்கும் சிறந்த இடங்களில் ஒன்றாக அதன் உலகளாவிய நற்பெயரை நாடு தொடர்ந்து வலுப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel