அமீரகத்தில் பல மாதங்களாக நிறுவனத்திடம் இருந்து சம்பளம் பெறாமல் இருந்த ஊழியர் ஒருவர், தனது முன்னாள் முதலாளிக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, வெற்றியும் பெற்றுள்ளார். செலுத்தப்படாத ஊதியம், முறையான பணிநீக்க அறிவிப்பு இல்லாதது மற்றும் பிற வேலைவாய்ப்பு தொடர்பான கோரிக்கைகள் தொடர்பான தகராறில் நீதிமன்றம் அந்த ஊழியருக்கு ஆதரவாக தீர்ப்பளித்துள்ளது.
இந்த வழக்கை விசாரித்த அபுதாபி தொழிலாளர் நீதிமன்றம், முதலாளி ஊழியருக்கு 50,930 திர்ஹம்ஸ் ரொக்கத்தை செலுத்தவும், அவரது சொந்த நாட்டிற்கு திரும்புவதற்கான 1,500 திர்ஹம் மதிப்புள்ள விமான டிக்கெடிக்கெட்டை வழங்கவும், அதிகாரப்பூர்வ அனுபவ சான்றிதழை வழங்கவும் உத்தரவிட்டதாகக் கூறப்படுகின்றது.
நீதிமன்ற பதிவுகளின் படி, அக்டோபர் 1, 2024 முதல் ஏப்ரல் 5, 2025 அன்று தனது வேலையின் கடைசி நாள் வரை சம்பளம் வழங்கப்படவில்லை என்று ஊழியர் புகாரளித்துள்ளார். மேலும் நியாயமற்ற பணிநீக்கம், அறிவிப்பு இல்லாதது, பயன்படுத்தப்படாத வருடாந்திர விடுப்பு மற்றும் வீடு திரும்பும் விமான டிக்கெட்டுக்கான இழப்பீட்டையும் கோரி முதலாளிக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார்.
முதலாளி அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்து, ஊழியர் இன்வாய்ஸ்களுக்கான கட்டணங்களை வசூலித்ததாகவும், நிறுவனத்தின் சார்பாக வசூலிக்கப்பட்ட அந்த பணத்தை ஒப்படைக்கத் தவறிவிட்டதாகவும் கூறி 12,200 திர்ஹம் எதிர் வழக்குத் தொடர்ந்திருக்கிறார். இரு தரப்பினரின் கூற்றுக்களை மதிப்பிடுவதற்கு நீதிமன்றம் ஒரு கணக்கியல் நிபுணரை நியமித்து அந்த நிபுணரால் வழங்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில், நீதிமன்றம் பின்வருமாறு தீர்ப்பளித்தது:
- செலுத்தப்படாத சம்பளம்: அக்டோபர் 2024 மற்றும் ஏப்ரல் 2025 க்கு இடையில் செலுத்த வேண்டிய ஊதியத்திற்கு 43,167 திர்ஹம்ஸ் ஊழியருக்கு வழங்க வேண்டும்.
- அறிவிப்பு கால இழப்பீடு: சட்டப்பூர்வமாகத் தேவையான அறிவிப்பு இல்லாமல் பணிநீக்கம் செய்யப்பட்டதற்காக 7,000 திர்ஹம்ஸ் ஊழியருக்கு வழங்க வேண்டும்.
- பயன்படுத்தாத விடுப்பு: பயன்படுத்தப்படாத விடுமுறை நாட்களுக்கு 770 திர்ஹம்ஸ் ஊழியருக்கு வழங்க வேண்டும்.
- ட்ராவல் அலவன்ஸ்: அவர் உள்ளூரில் வேறொரு வேலையைப் பெறாவிட்டால், சொந்த நாட்டிற்கு திரும்புவதற்கு ஒரு வழி டிக்கெட்டின் விலையாக 1,500 திர்ஹம்ஸ் ஊழியருக்கு வழங்க வேண்டும்.
- அனுபவச் சான்றிதழ்: பணியாளரின் சேவையை விவரிக்கும் அதிகாரப்பூர்வ சான்றிதழை வழங்க முதலாளிக்கு உத்தரவிடப்பட்டது.
அதேசமயம், முன் ஒப்பந்தம் இல்லாததைக் காரணம் காட்டி, தாமதமான அலவன்ஸ்களுக்கு கோரப்பட்ட 12 சதவீத வட்டியை வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டது, மேலும் எந்தவொரு புகாராலும் அல்லது சட்ட நடவடிக்கையாலும் நியாயமற்ற பணிநீக்கம் செய்யப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், ஒவ்வொரு தரப்பினரும் தங்கள் சொந்த சட்டச் செலவுகளை தாங்களே ஏற்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel