அபுதாபியில் வரும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் டார்ப் டோல் நேரங்கள் திருத்தப்பட்டு தினசரி மற்றும் மாதாந்திர கட்டண வரம்புகள் நீக்கப்படும் என்று ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் அறிவித்துள்ளது. புதிய அட்டவணையின் கீழ், திங்கள் முதல் சனிக்கிழமை வரை வசூலிக்கப்படும் கட்டண நேரம் மாற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது மாலை நேரம் தற்போதைய மாலை 5 மணி முதல் மாலை 7 மணி வரை இருக்கும் நிலையில் இது வரும் செப்டம்பர் முதல் மதியம் 3 மணி முதல் மாலை 7 மணி வரை நீட்டிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. அதேநேரத்தில், காலை கட்டணம் வசூலிக்கப்படும் நேரம் மாறாமல் இருக்கும் என்றும், ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் அதிகாரப்பூர்வ பொது விடுமுறை நாட்கள் தொடர்ந்து இலவசமாக இருக்கும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதலாக, தற்போது நடைமுறையில் இருக்கும் தினசரி மற்றும் மாதாந்திர டோல் வரம்புகளும் நீக்கப்படும் என்று ஆணையம் தெரிவித்துள்ளது. தற்போது, ஒவ்வொரு தனியார் வாகனத்திற்கும் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 16 திர்ஹம் கட்டணம் வசூலிக்கப்படும். அதேபோன்று மாத கட்டணமாக தனிநபரின் முதல் வாகனத்திற்கு 200 திர்ஹம், இரண்டாவது வாகனத்திற்கு 150 திர்ஹம், மற்றும் மூன்றாவது அல்லது கூடுதல் வாகனத்திற்கு 100 திர்ஹம் வசூலிக்கப்படுகிறது.
ஆனால், இப்போது ஒரு வாகனம் darb டோல் கேட் வழியாக செல்லும் ஒவ்வொரு முறையும் 4 திர்ஹம் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும், அதிகபட்ச வரம்பு இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், மாற்றுத்திறனாளி மக்கள், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள், மூத்த குடிமக்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்கள் உள்ளிட்ட தகுதியுள்ள மக்களுக்கான தற்போதுள்ள விலக்கு கொள்கைகள் நடைமுறையில் இருக்கும் என்றும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
போக்குவரத்து நெரிசலை மேம்படுத்துவதையும், நெரிசலான நேரங்களில் பிரதான சாலைகளில் நெரிசலைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டு இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரசபை தெரிவித்துள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட டார்ப், அபுதாபியின் பிரதான நுழைவு மற்றும் வெளியேறும் பாலங்களில் எட்டு சுங்கச்சாவடிகளை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel