சாலைப் பயனாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, பொது வீதிகளில் அனைத்து வகையான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களையும் பயன்படுத்துவதை முழுமையாகத் தடை செய்துள்ளதாக அஜ்மான் காவல்துறை அறிவித்துள்ளது. இ-ஸ்கூட்டர் மற்றும் இரு சக்கர வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்பதை நினைவூட்டும் முந்தைய அறிவுறுத்தலையும், அங்கீகரிக்கப்படாத எலெக்ட்ரிக் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர்களைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் எச்சரிக்கையையும் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்புடன், தலைக்கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் பயணம் செய்தல், ஒருவழி சாலைகளில் தவறான வழியில் பயணித்தல், வெளியேறும் வழிகளிலிருந்து சாலைகளுக்குள் நுழைதல் மற்றும் பாதசாரிகள் கடக்கும் இடங்களை பாதுகாப்பற்ற முறையில் பயன்படுத்துதல் போன்ற பொதுவான மீறல்களை எடுத்துக்காட்டும் வீடியோவையும் அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.
ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும், சாலைப் பாதுகாப்பு குறித்து இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு காவல்துறை தொடர்ந்து நினைவூட்டல்களை வழங்கி வருகிறது. அபுதாபியில், மூன்று நபர்கள் பொருத்தமற்ற பகுதிகளில் இ-ஸ்கூட்டர்களை ஓட்டுவதைக் காட்டும் வீடியோ ஒன்றினை சமீபத்தில் அபுதாபி காவல்துறை வெளியிட்டது, இது இ-ஸ்கூட்டர் பயன்பாடுகள் மீது கடுமையான விதிமுறைகள் மற்றும் அமலாக்கம் குறித்த பொது விவாதத்தைத் தூண்டியதாக கூறப்படுகின்றது. துபாயிலும் இது போன்ற சம்பவங்கள் அவ்வப்போது நிகழ்வதாக கூறப்படுகின்றது.
இத்தகைய சூழலில், துபாயில், சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) மற்றும் துபாய் காவல்துறை ஆகியவற்றுடன் இணைந்து, சைக்கிள் ஓட்டுபவர்கள் மற்றும் இ-ஸ்கூட்டர்கள் விதிமீறல்களைக் கண்காணிக்க ஒரு சிறப்புப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. ஆகவே, அமீரகத்தில் நியமிக்கப்பட்ட பாதுகாப்பான மண்டலங்களில் மட்டுமே இ-ஸ்கூட்டர்களைப் பயன்படுத்துமாறு குடியிருப்பாளர்கள் வலியுறுத்தப்படுகின்றனர்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel