துபாயில் இசை நிகழ்ச்சிக்கு வந்தவரின் மொபைல் போனை திருடியதற்காக துபாய் நீதிமன்றம் துப்புரவுப் பணியாளர் ஒருவருக்கு 9,500 திர்ஹம் அபராதம் விதித்துள்ளது. அந்த நபர் தொலைத்த மொபைலை கிளீனர் சட்டவிரோதமாக கையகப்படுத்தியதற்காக குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டது. திருடப்பட்ட மொபைலின் மதிப்பு 4,500 திர்ஹம்ஸ் தொகையுடன் சேர்த்து 5,000 திர்ஹம் அபராதமும் செலுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஒரு பிரபலமான பொழுதுபோக்கு மற்றும் ஷாப்பிங் இடத்தில் தனது மனைவியுடன் ஒரு இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது ஒரு ஆசிய நபர் தனது சாம்சங் தொலைபேசியை தொலைத்துவிட்டதாகப் புகார் அளித்தபோது இந்த வழக்கு துவங்கியது. மொபைல் தனது பாக்கெட்டிலிருந்து நழுவியதை உணர்ந்த அவர், அந்தப் பகுதியைத் தேடி, அருகிலுள்ள துப்புரவுப் பணியாளரிடம் அதைப் பற்றிக் கேட்டிருக்கிறார். இருப்பினும், ஒரு பெண் ஏற்கனவே அதை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டதாகக் கூறி தொழிலாளி அவரை திசைத்திருப்ப முயற்சித்துள்ளார்.
பின்னர், காவல்துறை விசாரணையில், பாதிக்கப்பட்டவரின் நாற்காலிக்கு அடியில் இருந்து தொலைபேசியை துப்புரவுப் பணியாளர் தானே எடுத்து, பணியாளர்கள் குடியிருப்பில் உள்ள தனது லாக்கரில் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. ஆனால், பணி நேரம் முடிந்து அவர் திரும்பி வந்தபோது, கைபேசி காணாமல் போனதைக் கண்டுபிடித்ததாகவும், வேறு யாரோ ஒருவர் திருடிச் சென்றதாகத் தெரிகிறது என்றும் கூறியுள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், துப்புரவுப் பணியாளரின் வாக்குமூலம், சாட்சி சாட்சியம் மற்றும் துணை ஆதாரங்களின் அடிப்படையில் தீர்ப்பை வழங்கியது. அதிகாரிகளிடம் சாதனத்தை ஒப்படைக்க அவருக்கு எந்த எண்ணமும் இல்லை என்று நீதிபதிகள் குறிப்பிட்டாலும், வழக்கின் அசாதாரண சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு தண்டனை விதிப்பதில் சிறிது தளர்வு அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel