துபாய் மெரினாவில் உள்ள உயரமான குடியிருப்பு கட்டிடமான ‘Marina Sail’இன் மேல் தளத்தில் இன்று (ஆகஸ்ட் 1, வெள்ளிக்கிழமை) அதிகாலை தீ விபத்து ஏற்பட்டதாகவும், இதனால் டஜன் கணக்கான குடியிருப்பாளர்கள் கட்டிடத்தில் இருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டதாகவும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவம் அதிகாலை 3:30 மணியளவில் நடந்ததாகக் கூறப்படுகின்றது. தீ எச்சரிக்கைகள் மற்றும் அவசர செய்திகள் மூலம் விழித்தெழுந்த குடியிருப்பாளர்கள் பலர் உடனடியாக கட்டிடத்தை விட்டு வெளியேறியுள்ளனர்.
இதையடுத்து, அருகிலுள்ள பைப்லோஸ் ஹோட்டலின் ஊழியர்கள், தீ விபத்தில் பாதிக்கப்பட்ட கட்டிடத்தின் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்கியதாகவும், சில குடியிருப்பாளர்கள் ஹோட்டலுக்குள் தஞ்சம் புகுந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகளின் கூற்றுப்படி, தீ விரைவாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது, மேலும் குடியிருப்பாளர்கள் இரண்டு மணி நேரத்திற்குள் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப அனுமதிக்கப்பட்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டிடத்தில் வசிக்கும் குடியிருப்பாளர்களில் ஒருவர், “இது ஒரு பயங்கரமான அனுபவம். ஆனால் நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம், விஷயங்கள் மோசமாகும் முன் வெளியேற முடிந்தது.” என்று தனது அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார். மற்றொரு குடியிருப்பாளர், கட்டிடத்தை விட்டு வெளியேறும்போது உள்ளே அதிக புகை இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, சம்பவத்தின் போது விழித்திருந்ததாகக் கூறும் சில குடியிருப்பாளர்கள் தீயணைப்பு எச்சரிக்கை ஒலித்த சத்தம் கேட்டதாகவும் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் மெரினா பின்னாக்கிளில் ஜூன் மாதம் ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து தப்பிய பிறகு சமீபத்தில்Marina Sail-க்கு குடிபெயர்ந்த குடியிருப்பாளர், “நான் இப்போதுதான் இந்தக் கட்டிடத்திற்கு குடிபெயர்ந்தேன், மீண்டும் இதுபோன்ற சம்பவத்தை நான் சந்திக்க வேண்டியதில்லை என்று நம்பினேன்” என்று கவலை தெரிவித்துள்ளார்.
துபாய் மெரினாவில் ஏற்பட்ட பெரிய தீ விபத்துகளுக்கு சில வாரங்களுக்குப் பிறகு இந்த சமீபத்திய சம்பவம் நிகழ்ந்துள்ளது. சமீபத்தில் டைகர் டவரில் ஏற்பட்ட தீ விபத்தில் தீவிபத்தின் போது 3,800 க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டனர் என்பது குறிப்பிடதக்கது. இந்நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள தீ விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர், ஆனால் இதுவரை யாருக்கும் காயம் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel