துபாயின் பரபரப்பான முக்கிய சாலைகளில் ஒன்றான எமிரேட்ஸ் சாலையில் நீண்டகாலமாக நடைபெற்று வரும் பழுதுபார்ப்பு பணிகள் வரும் ஆகஸ்ட் 25 ஆம் தேதிக்குள் நிறைவடைய உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது எமிரேட்ஸ் சாலையை பயன்படுத்தும் அமீரக வாகன ஓட்டிகளுக்கு நிம்மதி அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) கடந்த இரண்டு மாதங்களாக, எமிரேட்ஸ் சாலையின் 14 கிலோமீட்டர் நீளமுள்ள ஒரு பகுதியை புனரமைத்து வருகிறது. வாகன ஓட்டிகளுக்கு பாதுகாப்பான, மென்மையான பயணத்தை உறுதி செய்வதற்காக வேகமான மற்றும் மெதுவான பாதைகளை RTA சரி செய்து வருகிறது.
அதாவது, வேகமான பாதைகளில் 14 சென்டிமீட்டர் பழைய மேற்பரப்பு அகற்றப்பட்டு, குறைபாடற்ற பூச்சுக்காக ஐந்து முதல் ஆறு புதிய அடுக்குகளால் மாற்றப்பட்டிருப்பதாகவும், இலகுவான போக்குவரத்தைத் தாங்கும் மெதுவான பாதைகள் எட்டு சென்டிமீட்டர் ஆழத்தில் தோண்டப்பட்டு, அவற்றின் சுமைக்கு ஏற்றவாறு குறைவான அடுக்குகளுடன் மீண்டும் மேற்பரப்பில் சமன்படுத்தப்பட்டதாகவும் அதிகரிகள் தெரிவித்துள்ளனர்.
போக்குவரத்து இடையூறுகளைக் குறைக்க இந்த திட்டம் கட்டங்களாக மேற்கொள்ளப்பட்டதாக RTA தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர் அதிகாரி ஒருவர் வெளியிட்டுள்ள விபரங்களின் படி, குழுக்கள் ஒவ்வொரு 48 முதல் 56 மணி நேரத்திற்கும் 400–500 மீட்டர் சாலையை நிறைவு செய்கின்றன. ஆகஸ்ட் 25 ஆம் தேதிக்குள், ஷார்ஜா மற்றும் அபுதாபியை நோக்கிய இரு திசைகளும் முழுமையாக மீண்டும் திறக்கப்படும், இது விரைவான போக்குவரத்து ஓட்டத்தை உறுதி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சாலை ஏன் பழுதுபார்க்கப்பட்டது?
சில பிரிவுகளில் நடைபாதை தரக் குறியீட்டில் (Pavement Quality Index-PQI) சுமார் 85 சதவீதமாகக் குறைந்துள்ளதை ஆய்வுகள் வெளிப்படுத்தியதை அடுத்து பழுதுபார்க்கும் முடிவு வந்ததாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர், இது முக்கியமாக கனரக லாரி போக்குவரத்தால் பழுது ஏற்பட்டது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கேமராக்கள், லேசர்கள் மற்றும் மென்மையான-அளவிடும் கருவிகள் பொருத்தப்பட்ட சிறப்பு வாகனங்கள் சாலைகளில் உள்ள விரிசல்கள், குழிகள் போன்ற 14 வகையான குறைபாடுகளை ஸ்கேன் செய்து, முழுமையான புனரமைப்பு தேவைப்படும் பகுதிகள், தடுப்பு பராமரிப்பு தேவைப்படும் பகுதிகளை அடையாளம் காண உதவியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த மேம்படுத்தல் பயண நேரத்தைக் குறைப்பது மட்டுமல்லாமல், வாகன தேய்மானத்தைக் குறைக்கும், எரிபொருள் செயல்திறனை மேம்படுத்தும் மற்றும் ஒட்டுமொத்த ஓட்டுநர் வசதியை மேம்படுத்தும் என்று RTA அதிகாரிகள் கூறுகின்றனர். எனவே, ஆகஸ்ட் 25 முதல், வாகன ஓட்டிகள் மிகவும் மென்மையான பயணத்தை எதிர்பார்க்கலாம். மேலும் ஆயிரக்கணக்கான ஓட்டுநர்களுக்கு தினசரி பயணங்கள் சீராக இருக்கும் என்றும் எதிர்பார்க்கலாம்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel