2025 ஆம் ஆண்டின் முதல் பாதியில் ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் தீவிரப்படுத்தப்பட்ட ஆய்வுகளின் போது புகையிலை பொருட்கள், குளிர்பானங்கள், எனர்ஜி பானங்கள் மற்றும் இனிப்பு பானங்கள் உட்பட சுமார் 17.6 மில்லியனுக்கும் அதிகமான கலால் வரி விதிகளுக்கு இணங்காத பொருட்களை (Non-Compliant Excise Goods) மத்திய வரி ஆணையம் (FTA) பறிமுதல் செய்துள்ளதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து தெரிவிக்கையில் நடப்பு ஆண்டில் ஜனவரி மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில், ஆய்வாளர்கள் 85,500 கள வருகைகளை மேற்கொண்டதாகவும், இது 2024 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தை விட 110.7% அதிகம் என்றும் கூறப்படுகிறது. உள்ளூர் அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையால் வரி மற்றும் அபராதங்களில் இருந்து சுமார் 357.22 மில்லியன் திர்ஹம்கள் ஈட்டப்பட்டதாகவும், இது கடந்த ஆண்டு திர்ஹம் 191.75 மில்லியனிலிருந்து 86.29% அதிகம் என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது.
தேவையான டிஜிட்டல் வரி முத்திரைகள் இல்லாமல் இருந்த 11.52 மில்லியன் புகையிலை பாக்கெட்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்ததாகக் கூறப்படுகிறது, இது கடந்த ஆண்டின் 5.52 மில்லியனை விட இரண்டு மடங்கு அதிகம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட முத்திரை அமைப்பு, உற்பத்தி அல்லது இறக்குமதி முதல் விற்பனை புள்ளி வரை ஒவ்வொரு பாக்கெட்டையும் கண்காணிக்க அதிகாரிகளுக்கு உதவுகிறது என்றும், கலால் வரி இணக்கத்தை உறுதிசெய்து கடத்தல் மற்றும் கள்ளநோட்டுகளைத் தடுக்கிறது என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அதேசமயம், ஆய்வாளர்கள் 6.1 மில்லியன் பாட்டில்கள் மற்றும் விதிகளுக்கு இணங்காத குளிர் பானங்களின் கேன்களையும் பறிமுதல் செய்துள்ளனர், இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் கைப்பற்றப்பட்ட 1.74 மில்லியனை விட 3.5 மடங்கு அதிகம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஐக்கிய அரபு அமீரக கலால் வரிச் சட்டத்தின் கீழ், ஆரோக்கியமற்ற பொருட்களின் நுகர்வைக் குறைக்க கார்பனேற்றப்பட்ட பானங்கள், எனர்ஜி பானங்கள் மற்றும் இனிப்பு பானங்களுக்கு வரி விதிக்கப்படுகின்றன. 2026 முதல், சர்க்கரை சேர்க்கப்பட்ட இனிப்பு பானங்களின் நிலையான வரி விகிதத்திற்கு பதிலாக அவற்றில் சேர்க்கப்பட்டுள்ள சர்க்கரை அளவின் அடிப்படையில் வரி விதிக்கப்படும் என்றும் அரசாங்கம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து FTA இன் வரி இணக்க நிர்வாக இயக்குனர் சாரா அல் ஹப்ஷி பேசுகையில், அதிகாரசபையின் மேம்பட்ட டிஜிட்டல் கண்காணிப்பு கருவிகளின் பயன்பாடு சந்தை மேற்பார்வையை வலுப்படுத்தியுள்ளது மற்றும் அமலாக்க செயல்திறனை மேம்படுத்தியுள்ளது என்று கூறியதுடன்,”இந்த தொழில்நுட்பங்கள் UAE வரித் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தவறும் கடத்தப்பட்ட பொருட்களைக் கண்டறிந்து அகற்றுவதில் முக்கியமானவை” என்று எடுத்துரைத்துள்ளார். மேலும், அவர் தொடர்ந்து பேசுகையில், நாடு தழுவிய ஆய்வுகள் நுகர்வோரைப் பாதுகாக்கவும் வணிகங்கள் வரிச் சட்டங்களைப் பின்பற்றுவதை உறுதி செய்யவும் தொடர்ந்து உதவும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel