அமீரகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை அதிகாலை), ஷார்ஜாவின் இண்டஸ்ட்ரியல் ஏரியா 10 இல் ஒரு பயங்கர தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். முகமது பின் சையத் சாலை உட்பட பல கிலோமீட்டர் தொலைவில் இருந்து பார்க்கும் போதிலும் அடர்த்தியான கரும்புகை வெளியேறியதைக் காண முடிந்ததாக நேரில் கண்ட குடியிருப்பாளர்களும் தெரிவித்துள்ளனர். ஷார்ஜா காவல்துறையினர் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையின் படி, ஷார்ஜா தொழில்துறை பகுதியில் உள்ள பயன்படுத்தப்பட்ட ஆட்டோ பாகங்களை கையாளும் ஒரு வசதியில் தீ விபத்து ஏற்பட்டது தெரிய வந்துள்ளது.
விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த சிவில் பாதுகாப்பு குழுக்கள், உள்ளூர் அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து, நிலைமையைக் கட்டுப்படுத்த போராடியதாகக் கூறப்படுகின்றது. தீயை கட்டுப்படுத்தவும், அண்டை வணிகங்களுக்கு தீ பரவாமல் தடுக்கவும் தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்புக் குழுவினர் தீவிரமாக பணியாற்றியதாகவும், வெள்ளிக்கிழமை பிற்பகல் வரை, தீயை முழுமையாக கட்டுக்குள் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், நிலைமையை நிர்வகிக்க அவசர வாகனங்கள் மற்றும் பணியாளர்கள் சம்பவ இடத்தில் நிறுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ விபத்துக்கான காரணம், சேதத்தின் அளவு அல்லது காயங்கள் குறித்த அறிக்கைகள் குறித்த விவரங்களை அதிகாரிகள் இன்னும் வெளியிடவில்லை.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel