அமீரகத்தின் ஃபுஜைரா எமிரேட்டில் உள்ள சஃபாத் பகுதியில் இன்று (வெள்ளிக்கிழமை , ஆகஸ்ட் 22) பிற்பகல் 3.3 ரிக்டர் அளவிலான லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய வானிலை ஆய்வு மையத்தின் (NCM) தேசிய நில அதிர்வு வலையமைப்பு (National Seismic Network) தெரிவித்துள்ளது. 2.3 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாகக் கூறப்படும் இந்த நிலநடுக்கம், அமீரக நேரப்படி மதியம் 12:35 மணிக்கு பதிவாகியுள்ளது. மேலும், இது குடியிருப்பாளர்களால் உணரப்படவில்லை என்றும், நாட்டில் எந்த தாக்கமும் இல்லை என்றும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
ஒரு நாளுக்கு முன்னதாக, ஓமானின் மதா பகுதியில் அதிகாலை 5:13 மணிக்கு 2.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவானதைத் தொடர்ந்து இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே, இந்த மாத தொடக்கத்தில், அல் சிலாவை 3.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் தாக்கியது, மேலும் சில குடியிருப்பாளர்களால் இந்த அதிர்வுகள் லேசாக உணரப்பட்டது. இருப்பினும் அது எந்த சேதத்தையும் ஏற்படுத்தவில்லை. அதே போல் சில நாட்களுக்கு முன்பு, ஆகஸ்ட் 5 ஆம் தேதி, கோர் ஃபக்கானில் 2 ரிக்டர் அளவிலான சிறிய நிலநடுக்கம் கண்டறியப்பட்டது மற்றும் அப்பகுதியில் வசிப்பவர்களால் சிறிது உணரப்பட்டது என்று NCM தெரிவித்தது.
ஐக்கிய அரபு அமீரகம் ஒரு பூகம்ப மண்டலத்தில் இல்லை என்றாலும், உலகின் மிகவும் நில அதிர்வு மிகுந்த பகுதிகளில் ஒன்றான ஜாக்ரோஸ் மலைத்தொடருக்கு அருகாமையில் இருப்பதால் சிறிய நிலநடுக்கங்கள் அவ்வப்போது ஏற்படுகிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
“ஈரான் மற்றும் ஈராக் வழியாகச் செல்லும் ஜாக்ரோஸ் மலைத்தொடரில் அடிக்கடி நில அதிர்வு நடவடிக்கைகள் ஏற்படுகின்றன. பல நிகழ்வுகள் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் நடந்தாலும், சில சமயங்களில் அவை வடக்கு எமிரேட்ஸில் உணரப்படலாம்” என்று NCM இன் நில அதிர்வு கண்காணிப்புப் பிரிவின் செயல் தலைவர் முகமது அல்ஹசானி ஊடகம் ஒன்றுக்கு அளித்த முந்தைய நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார். அதே போல் அமீரகத்தில் அவ்வப்போது சிறி நிலநடுக்கங்கள் ஏற்பட்டாலும் அது பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தாது என்று நிபுணர் ஒருவர் ஏற்கெனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel