துபாயின் மிகவும் கவர்ச்சிகரமான இடங்களில் ஒன்றாக வேகமாக வளர்ந்து வரும் ஹத்தாவில் புதிய வணிக மற்றும் சுற்றுலா வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஹத்தா நிலையான நீர்வீழ்ச்சி (Hatta Sustainable Waterfalls) திட்டத்தில் தொடங்கப்பட்டுள்ள சமீபத்திய முயற்சி, நிலையான பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியை ஊக்குவிக்கும் அதே வேளையில் வேலை வாய்ப்புகளையும் உருவாக்கும் என்று கூறப்படுகிறது. இது ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் செய்யப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, ஹத்தா நீர்வீழ்ச்சிகளில் உள்ள அனைத்து விற்பனை இடங்களும் ஹத்தாவில் வசிக்கும் எமிராட்டிகளுக்கு ஒரு வருடத்திற்கு இலவசமாக ஒதுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை சிறு வணிகங்களை அவற்றின் ஆரம்ப கட்டங்களில் ஆதரிப்பதற்கும் உள்ளூர் குடும்பங்களுக்கு வாய்ப்புகளை வழங்குவதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த முயற்சி துபாய் 2040 நகர்ப்புற மாஸ்டர் பிளான், ஹத்தா மேம்பாட்டு மாஸ்டர் பிளான் மற்றும் ஹத்தாவின் வளர்ச்சிக்கான உச்சக் குழுவின் இலக்குகளுடன் ஒத்துப்போகிறது. இது துபாய் சமூக நிகழ்ச்சி நிரல் 33 மற்றும் துபாய் பொருளாதார நிகழ்ச்சி நிரல் D33 ஆகியவற்றையும் ஆதரிக்கிறது, இவை இரண்டும் துபாயை உலகின் முதல் மூன்று சுற்றுலா நகரங்களில் ஒன்றாக நிலைநிறுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன, அதே நேரத்தில் பொருளாதார மேம்பாடு மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை உறுதி செய்கின்றன.
750 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்ட இந்த புதிய இடத்தில் நான்கு உணவகங்கள், நான்கு சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் ஆறு உணவு மற்றும் பான கியோஸ்க்குகள் (food and beverage kiosks) அடங்கும். இந்த இடங்களில் எமிராட்டி, அரபு, மேற்கத்திய மற்றும் பாரம்பரிய உணவு வகைகள், கஃபேக்கள் மற்றும் பரிசு கடைகள் ஆகியவை இடம்பெறும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த கூடுதல் வசதிகள் சுற்றுலாவை ஊக்குவிக்கும், உள்ளூர் கலாச்சாரத்தைக் கொண்டாடும் மற்றும் ஹத்தா குடியிருப்பாளர்களிடையே பொருளாதார தன்னிறைவை வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து துபாய் முனிசிபாலிட்டியின் பொது வசதிகள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பேதர் அன்வாஹி பேசுகையில், “முதல் முறையாக, ஹத்தா டேம் பகுதியில், குறிப்பாக Sustainable Waterfalls-ல் முதலீடு மற்றும் வணிக வாய்ப்புகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. இது உள்ளூர் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதிலும் எமிராட்டி தொழில்முனைவோரை மேம்படுத்துவதிலும் ஒரு குறிப்பிடத்தக்க படியைக் குறிக்கிறது,” என்று விவரித்துள்ளார்.
ஹத்தா நீர்மின் நிலையத்தின் மேல் அணையிலிருந்து அருவியாகப் பாயும் நீர் ஏற்கனவே ஒரு முக்கிய சுற்றுலா தலமாக மாறியுள்ளது. உலகிலேயே மிகப்பெரிய இந்த கலைப்படைப்பு, மறைந்த ஷேக் சையத் பின் சுல்தான் அல் நஹ்யான் மற்றும் மறைந்த ஷேக் ரஷீத் பின் சயீத் அல் மக்தூம் ஆகியோரின் உருவங்களை சுவரில் சித்தரிக்கிறது, மேலும் இந்த சுவரோவியம் 2,199 சதுர மீட்டர் பரப்பளவில் 1.2 மில்லியனுக்கும் அதிகமான இயற்கை பளிங்குக் கற்களால் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel