ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் இந்திய நாட்டினருக்கான பாஸ்போர்ட் விண்ணப்பங்களுக்கு புதிய புகைப்பட விதிமுறையை துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின்படி, பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும் பெரும்பாலானோர் புதிய புகைப்படங்களைச் சமர்ப்பிக்க வேண்டியிருக்கும்.
ஆம், இந்தியாவின் ICAO-வின் வழிகாட்டுதல்களுக்கு இணங்க, பாஸ்போர்ட்டில் பதியப்படும் புகைப்படங்கள் புதிய தரநிலைகளைக் கொண்டிருக்க வேண்டும் என்று இந்திய துணைத் தூதரகம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த புதிய விதிமுறை வரும் செப்டம்பர் 1, 2025 முதல் அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச விமானப் போக்குவரத்து அமைப்பான ICAO-வின் வழிகாட்டுதல்களின்படி, இந்திய வெளியுறவு அமைச்சகம் அளித்த உத்தரவைத் தொடர்ந்து இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது என்பது தெரிய வந்துள்ளது. மேலும் இந்த புதிய விதிமுறையானது பயண ஆவணங்களுக்கான சர்வதேச பயோமெட்ரிக் தரநிலைகளுடன் ஒத்துப்போகிறது என்றும் கூறப்படுகிறது.
புதிய விதி பற்றிய விபரங்கள்
இந்த உத்தரவு இந்தியாவின் வெளியுறவு அமைச்சகத்தின் (MEA) பாஸ்போர்ட் சேவா போர்டல் மூலம் வழங்கப்பட்ட வழிமுறைகளைப் பின்பற்றுகிறது. சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பின் (ICAO) தரநிலைகளைப் பூர்த்தி செய்யும் புகைப்படங்கள் மட்டுமே பாஸ்போர்ட் விண்ணப்பங்களுக்கு ஏற்றுக்கொள்ளப்படும் என்பதையும் தூதரகம் உறுதிப்படுத்தியிருக்கிறது.
புதிய புகைப்படத் தரநிலைகள் என்ன?
விண்ணப்பதாரர்கள் இந்தப் புதுப்பிக்கப்பட்ட விதிகளைப் பின்பற்ற வேண்டும்:
- முகம் மற்றும் தோள்பட்டையின் நெருக்கமான தோற்றம், முகம் புகைப்படத்தின் 80-85% இடத்தை உள்ளடக்கியிருக்க வேண்டும்.
- முகம் முழுமையாகவும், நேராகவும், கண்கள் திறந்த நிலையிலும், இயல்பான தோற்றத்துடனும் இருக்க வேண்டும்.
- கண்களை மறைக்கும் வகையில் முடி இருக்கக் கூடாது; வாய் மூடியிருக்க வேண்டும்.
- புகைப்படத்தில் நிழல், சிவப்பு-கண் (red-eye) அல்லது ஃபிளாஷ் பிரதிபலிப்பு இருக்கக் கூடாது.
- ஒரே சீரான ஒளியமைப்புடன், சருமத்தின் நிறம் இயல்பாகத் தெரிய வேண்டும்.
- தலை, முடியின் உச்சி முதல் கன்னம் வரை, புகைப்படத்தின் நடுவில் இருக்க வேண்டும்.
- 1.5 மீட்டர் தொலைவில் இருந்து எடுக்கப்பட்டிருக்க வேண்டும். மங்கலாகவோ அல்லது டிஜிட்டல் முறையில் மாற்றியமைக்கப்பட்டோ இருக்கக் கூடாது.
- கண்ணாடியில் ஒளி பிரதிபலிப்பதைத் தவிர்க்க, கண்ணாடி அணிந்திருப்பவர்கள் அதை அகற்ற வேண்டும்.
- மத காரணங்களுக்காக தலைக்கவசம் அணியலாம், ஆனால் முகத்தின் அம்சங்கள் முழுமையாகத் தெரிய வேண்டும்.
துபாய் துணைத் தூதரகத்தின் பத்திரிகை பிரிவு, புதிய விதிமுறைகள் குறித்து அதன் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகவும், பாஸ்போர்ட் விண்ணப்ப சேவை வழங்கும் BLS இண்டர்நேஷனல் நிறுவனத்திற்கும் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் உறுதிப்படுத்தியுள்ளது. இருப்பினும், BLS நிறுவனம் இன்னும் தங்கள் இணையதளத்தில் புதிய விதிமுறைகளை புதுப்பிக்கவில்லை.
குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட இதே போன்ற அறிவிப்புகளைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, மேலும் அபுதாபியில் உள்ள இந்திய தூதரகமும் விரைவில் இந்த விதியை அமல்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel