துபாயில் உள்ள உம் சுகீம் ஸ்ட்ரீட்டில் போக்குவரத்து நெரிசலை கணிசமாக அதிகரிக்கும் வகையில், இரண்டு திசைகளிலும் நான்கு பாதைகளைக் கொண்ட 800 மீட்டர் புதிய சுரங்கப்பாதையை துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA), அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்துள்ளது. இந்த சுரங்கப்பாதை, அல் கைல் சாலையின் சந்திப்பிலிருந்து ஷேக் முகமது பின் சையத் சாலையின் சந்திப்பு வரையிலான நீண்டுள்ள உம் சுகீம் ஸ்ட்ரீட் மேம்பாட்டுத் திட்டத்தின் முக்கிய அங்கமாகும்.
உம் சுகீம் சாலை மேம்பாட்டுத் திட்டமானது, அல் பர்ஷா சவுத் 1, 2, மற்றும் 3, துபாய் ஹில்ஸ், அர்ஜான் மற்றும் துபாய் சயின்ஸ் பார்க் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும், ஒரு மில்லியனுக்கும் அதிகமான குடியிருப்பாளர்களுக்கு பயனளிக்கும் வகையில் இந்த உள்கட்டமைப்பு அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் இந்த திட்டம் இல்பகுதியில் போக்குவரத்து ஓட்டத்தை அதிகரிக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து RTA இன் நிர்வாக இயக்குநர்கள் குழுவின் இயக்குநர் ஜெனரலும் தலைவருமான மட்டர் அல் தாயர் பேசுகையில், இந்த திட்டம் துபாயில் உள்ள நான்கு முக்கிய வழித்தடங்களான ஷேக் சையத் சாலை, அல் கைல் சாலை, ஷேக் முகமது பின் சையத் சாலை மற்றும் எமிரேட்ஸ் சாலை ஆகியவற்றுக்கு இடையேயான இணைப்பை மேம்படுத்தும் என கூறியுள்ளார்.
மேலும், இது உம் சுகீம் ஸ்ட்ரீட்டின் திறனை இரு திசைகளிலும் மணிக்கு 16,000 வாகனங்களாக அதிகரிக்கிறது, போக்குவரத்து ஓட்டத்தை மேம்படுத்துகிறது, மேலும் ஷேக் முகமது பின் சையத் சாலை மற்றும் அல் கைல் சாலைக்கு இடையிலான பயண நேரத்தை 61 சதவீதம் குறைக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மொத்தம் 4.6 கிலோமீட்டர் தூரத்தை உள்ளடக்கிய இந்த திட்டத்தில், கிங்ஸ் பள்ளிக்கு அருகிலுள்ள உம் சுகீம் ஸ்ட்ரீட் மற்றும் அல் பர்ஷா சவுத் ஸ்ட்ரீட்டில் உள்ள சந்திப்பை மறுசீரமைப்பு செய்வதும் அடங்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
ஜுமேரா தெருவிலிருந்து எமிரேட்ஸ் சாலை வரை 16 கிலோமீட்டர் நீளமுள்ள உம் சுகீம்-அல் குத்ரா வழித்தடத்தை மேம்படுத்துவதற்கான ஒரு பெரிய உத்தியின் ஒரு பகுதியாக இந்த முயற்சி அமைகிறது. துபாயின் மிக முக்கியமான கிழக்கு-மேற்கு போக்குவரத்து பாதைகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது, இது நகரின் முக்கிய வடக்கு-தெற்கு சாலைகளுடன் இணைப்பை ஆதரிக்கிறது.
இந்த கட்டுமானம் முழுவதும் RTA மேம்பட்ட ஸ்மார்ட் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தியது தெரிய வந்துள்ளது. அதுமட்டுமில்லாமல், கட்டுமானத் தரவை நிகழ்நேரத்தில் கண்காணிக்கவும், முடிவெடுப்பதை மேம்படுத்தவும், செயல்பாட்டுத் திறனை அதிகரிக்கவும், கள ஆய்வு நேரத்தை 60 சதவீதம் குறைக்கவும் செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இந்த சமீபத்திய கட்டம் உம் சுகீம் ஸ்ட்ரீட்டில் முந்தைய மேம்பாடுகளை அடிப்படையாகக் கொண்டதாகும். 2013 ஆம் ஆண்டில், RTA இந்த திட்டத்தின் முதல் கட்டத்தை நிறைவு செய்தது, இதில் இரண்டு மூன்று வழிப் பாலங்கள் கட்டப்பட்டன. பின்னர் 2020 ஆம் ஆண்டில் துபாய் ஹில்ஸ் மற்றும் அல் பர்ஷா சவுத் நுழைவாயிலில் 500 மீட்டர் பாலம் கட்டி முடிக்கப்பட்டது. இந்த வரிசையில், தற்போது புதிதாக திறக்கப்பட்ட சுரங்கப்பாதையின் போக்குவரத்து திறனைப் பொருத்தவரை, இரு திசைகளிலும் மணிக்கு 16,000 வாகனங்களை இடமளிக்கும் அளவுக்கு அதிகரித்துள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel