ADVERTISEMENT

UAE, சவுதி போன்று ஓமானிலும் வெளிநாட்டவர்களுக்கு அறிமுகமாகும் கோல்டன் விசா..!!

Published: 26 Aug 2025, 10:38 AM |
Updated: 26 Aug 2025, 3:38 PM |
Posted By: Menaka

ஓமான் உலகளாவிய முதலீட்டு மையமாக அதன் நிலையை வலுப்படுத்தவும் டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கிய அதன் மாற்றத்தை விரைவுபடுத்தவும் மேற்கொள்ளப்படும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, ஆகஸ்ட் 31 ஆம் தேதி முதலீட்டாளர்களுக்கான புதிய கோல்டன் விசா திட்டத்தை தொடங்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ADVERTISEMENT

இது குறித்து அந்நாட்டின் வர்த்தகம், தொழில் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், சிறந்த செயல்திறன் கொண்ட ஓமானி நிறுவனங்களை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்ட அல் மஜிதா நிறுவனங்கள் முயற்சி (“Al Majida Companies” initiative) மற்றும்  “Oman Business” என்ற தளம் வழியாக வணிகப் பதிவுகளை (commercial registrations) மின்னணு பரிமாற்றத்தில் செயல்படுத்தும் ஒரு புதிய சேவையுடன் இணைந்து இந்தத் திட்டம் தொடங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

மேலும், தோஃபரின் ஆளுநர் சையித் மர்வான் பின் துர்கி அல் சைத் (Sayyid Marwan bin Turki Al Said) அவர்களின் ஆதரவின் கீழ், சலாலாவில் நடைபெறும் நிகழ்வின் போது இது தொடர்பான அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கட்டுமானத் துறையில் வளர்ச்சியை அதிகரிக்க சுல்தான் கபூஸ் பல்கலைக்கழகம், ஜெர்மன் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், ஓமன் எரிசக்தி சங்கம் மற்றும் எபினா ஆகியவற்றுடன் ஒத்துழைப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இது குறித்து அமைச்சகத்தின் திட்டமிடல் இயக்குநர் ஜெனரல் முபாரக் பின் முகமது அல் டூஹானி (Mubarak bin Mohammed Al Douhani) கூறுகையில், கோல்டன் விசா திட்டம் முதலீட்டாளர்களுக்கு நீண்ட கால நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சி வாய்ப்புகளை வழங்கும் என்றும், புதிய சீர்திருத்தங்கள் ஓமானிய வணிகங்களை உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் விரிவுபடுத்த ஊக்குவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் பேசுகையில், வணிக பதிவுகளை (commercial records) டிஜிட்டல் மயமாக்குவது என்பது மிகவும் வெளிப்படையான, செலவு குறைந்த வர்த்தக சூழலை உருவாக்குவதற்கான ஒரு படியாகும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

ADVERTISEMENT

ஓமானின் இந்த நடவடிக்கை அமீரகம் மற்றும் சவுதி அரேபியா போன்ற வளைகுடா அண்டை நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்ட இதேபோன்ற கோல்டன் விசா திட்டங்களை பிரதிபலிக்கிறது, இந்த நாடுகள் வெளிநாட்டு முதலீட்டாளர்கள், தொழில்முனைவோர் மற்றும் திறமையான நிபுணர்களை ஈர்க்க நீண்டகால குடியிருப்பு உரிமைகளை வழங்குகின்றன.

இது போன்ற வளைகுடா நாடுகளின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel