கத்தாரில் வெள்ளிக்கிழமை தொழுகையின் போது பெரும்பாலான வணிக மற்றும் தொழில்துறை நிறுவனங்கள் 90 நிமிடங்கள் தங்கள் வேலையை நிறுத்த வேண்டும் என்ற புதிய விதியை அந்நாட்டின் வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
2025 ஆம் ஆண்டின் அமைச்சக முடிவு எண் (80) என்ற உத்தரவு, வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் ஷேக் பைசல் பின் தானி பின் பைசல் அல் தானி அவர்களால் பிறப்பிக்கப்பட்டு, கடந்த ஞாயிற்றுக்கிழமை நாட்டின் அதிகாரப்பூர்வ அரசிதழில் வெளியிடப்பட்டது. இந்த விதி வெளியிடப்பட்ட அடுத்த நாளே ஆகஸ்ட் 18, 2025 முதல் அமலுக்கு வந்ததாகவும் அறிக்கைகள் கூறுகின்றன.
இந்த உத்தரவின் கீழ், வெள்ளிக்கிழமை தொழுகைக்கான முதல் அழைப்பிலிருந்து வணிகங்கள் செயல்பாடுகளை நிறுத்தி வைக்க வேண்டும். இந்த விதிமுறை கடைகள், தொழிற்சாலைகள் மற்றும் பிற பொது நிறுவனங்களுக்கு பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது.
இருப்பினும், மருந்தகங்கள், மருத்துவமனைகள், ஹோட்டல்கள், பேக்கரிகள், எரிபொருள் நிலையங்கள், தொலைத்தொடர்பு வழங்குநர்கள் மற்றும் போக்குவரத்து சேவைகள் உட்பட பல்வேறு வகையான அத்தியாவசிய சேவைகளுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஷிப்ட் அமைப்புகளின் கீழ் 24/7 இயங்கும் விற்பனை நிலையங்கள், விமான நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் எல்லைக் கடக்கும் இடங்களில் உள்ள வணிக வசதிகளும் இதில் அடங்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், தேவைப்பட்டால் விலக்கு அளிக்கப்பட்ட நடவடிக்கைகளின் பட்டியலை விரிவுபடுத்தவும் தொடர்புடைய துறைக்கு இது அங்கீகாரம் அளித்துள்ளதாகக் கூறப்படுகின்றது. பொது நலனுக்கு சேவை செய்வதையும் சமூக நல்வாழ்வை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. கத்தார் முழுவதும் உள்ள அரசு அதிகாரிகள் தங்கள் அதிகார வரம்புகளுக்குள் இந்த விதி செயல்படுத்தப்படுவதை உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது போன்ற வளைகுடா நாடுகளின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel